இந்த புரட்சிகரமான சாதனை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதோடு, கட்டுமானத்தில் புதுமை மீதான ஜப்பானின் ஆர்வத்தையும் காட்டுகிறது. இதன் முழு செயல்முறையும் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? இந்தத் திட்டம் ஏன் அவசியமானது? பாரம்பரிய கட்டுமான முறைகளைவிட இது நிலையானதா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
இவ்வளவு குறுகிய காலத்தில் ரயில் நிலையம் எப்படி கட்டப்பட்டது?
புதிய ஹட்சுஷிமா நிலையம், 3டி-அச்சிடப்பட்ட கூறுகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. அவை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு ஒரே இரவில் ஒன்று சேர்க்கப்பட்டன. மேலும், இந்த முறையில் கட்டப்பட்ட உலகின் முதல் ரயில் நிலையமாகவும் அமைகிறது. இந்த நிலையம் சுமார் 2.6 மீட்டர் உயரம் மற்றும் சுமார் 10 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு சிறிய கட்டமைப்பாகும்.
மார்ச் 26 அன்று இரவு 11:57 மணிக்கு கடைசி ரயில் புறப்பட்ட பிறகு, இதன் கட்டமைப்பு பணி தொடங்கியது. கிரேன் உதவியுடன், தொழிலாளர்கள் பழைய அமைப்பிலிருந்து சில அடி தூரத்தில் இதற்கான தளவாடங்களை நிலைநிறுத்தினர். அடுத்த நாள் காலை 5.45 மணிக்கு, அன்றைய முதல் ரயில் வந்தபோது, நிலையத்தின் வெளிப்புற அமைப்பு தயார் நிலையில் இருந்தது.
ரயில் நிலையத்தின் முழு கட்டமைப்பும் ஆறு மணி நேரத்திற்குள் கட்டப்பட்டுள்ளது. பல மாதங்கள் எடுக்கும் பாரம்பரிய முறைகளைவிட இது வேகமாக கட்டப்படுவதால் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க இந்த முறை பயன்படுத்தப்பட்டது.
ரயில் நிலையத்தின் வெளிப்புற கட்டமைப்பு கட்டி முடிக்கப்பட்டாலும், நிலையம் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு தயாராகவில்லை. டிக்கெட் இயந்திரங்கள் மற்றும் ஐசி கார்டு ரீடர்கள் போன்ற உபகரணங்கள் இன்னும் தேவைப்படுகின்றன. ஜூலை 2025-ல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 3டி-அச்சிடப்பட்ட ரயில் நிலையம் ஏன் அவசியமானது?
ஹட்சுஷிமா என்பது ஜப்பானின் கிசே பாதையில் உள்ள ஒரு சிறிய, பணியாளர்கள் இல்லாத ரயில் நிலையமாகும். இது 1938-ல் கட்டப்பட்டது மற்றும் 1978-ல் மட்டுமே மின்மயமாக்கப்பட்டது. பல கிராமப்புற நிலையங்களைப் போலவே, இதன் பயணிகளின் எண்ணிக்கையும் பல ஆண்டுகளாகக் குறைந்துள்ளது.
இந்த ரயில் நிலையம் அருகிலுள்ள தீவான ஜினோஷிமாவுடன் உள்ளூர் மக்களை இணைக்கிறது. ஹட்சுஷிமா ரயில் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 530 பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மூன்று முறை மட்டுமே வருகின்றன. நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ரயில் நிலையங்களில் இது இயல்பானதுதான்.
பாரம்பரிய கட்டுமான முறைகளைவிட 3டி பிரிண்டிங் ஏன் நிலையானது?
இந்தப் புதிய முறை பெரிய திட்டங்களை நிர்மாணிப்பதற்கான நேரத் தடையை நீக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்கு அப்பால் செலவு மற்றும் நிலைத்தன்மை அடிப்படையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்லாமல், இந்த நிலையம் நில அதிர்வு சக்திகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் சுவர்கள் சிமெண்ட் கலவைகளுடன் 3டி அச்சிடலைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. மேலும், எஃகு கம்பிகளால் வலுவூட்டப்பட்டுள்ளன. இது கட்டடத்தை பூகம்பங்களுக்கு எதிராக மீள்தன்மை கொண்டதாக ஆக்குகிறது.
ஜப்பானின் பொறியியல் சாதனை
ஹட்சுஷிமா நிலையத்தின் வெற்றி, பொது உள்கட்டமைப்பில் ஜப்பானின் புதுமை நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். ஷின்கான்சென் புல்லட் ரயில்கள், டோக்கியோ ஸ்கை ட்ரீ மற்றும் அகாஷி-கைக்யோ பாலம் போன்ற மேம்பட்ட பொறியியல் சாதனைகளுக்கு ஜப்பான் நாடு பெயர் பெற்றது.
April 14, 2025 5:59 PM IST

