அல்ஜீரியா மற்றும் மவுரிடேனியா ஆகிய நாடுகளுடன் இந்தியா இந்த இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 85வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது ஒரு படி முன்னேறி 84வது இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்தியர்கள் முன் அனுமதியின்றி விசா இல்லாமல் பயணிக்கக் கூடிய நாடுகளின் எண்ணிக்கை 57-ல் இருந்து 55 ஆகக் குறைந்துள்ளது.
பாஸ்போர்ட் தரவரிசை என்பது அந்த நாட்டின் சொந்த விசா விதிமுறைகளை மட்டும் சார்ந்தது அல்ல; உலக அளவில் மற்ற நாடுகளின் மாற்றங்களையும் பொறுத்து அமைகிறது. நடப்பாண்டில் ஈரான் நாடு இந்தியர்களுக்கு வழங்கி வந்த விசா ரத்து முறையை நிறுத்தியது.
பொலிவியா நாடு இந்தியர்களுக்கான வருகையின் பேரில் வழங்கும் விசா (Visa-on-arrival) முறையை மாற்றி, மின்னணு விசா (e-Visa) முறையைக் கொண்டுவந்தது. இத்தகைய காரணங்களால் இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 2 குறைந்துள்ளது.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எந்தவொரு முன் அனுமதியும் இன்றி உலகளவில் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் 188 நாடுகளின் அனுமதியுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
இந்திய பாஸ்போர்ட் மூலம் விசா முன் அனுமதியின்றி செல்லக்கூடிய சில முக்கிய நாடுகளின் பட்டியல்:
ஆசியா: பூடான், கஜகஸ்தான், மக்காவ், மலேசியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து.
ஆப்பிரிக்கா: அங்கோலா, மொரிஷியஸ், ருவாண்டா மற்றும் செனகல்.
கரீபியன் மற்றும் அமெரிக்கா: பார்படோஸ், டொமினிகா, கிரெனடா, ஹைதி, ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ.
ஓசியானியா மற்றும் பசிபிக்: குக் தீவுகள், ஃபிஜி, கிரிபாட்டி, மைக்ரோனேசியா, கியூ மற்றும் வனுவாட்டு.
இந்தத் தரவரிசையானது குறுகிய கால சுற்றுலாப் பயணங்களுக்கான விசா வசதியை மட்டுமே குறிக்கிறது. வேலைவாய்ப்பு, உயர் கல்வி அல்லது நிரந்தர குடியிருப்பு போன்றவற்றுக்கு அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களின்படி முறையான விசா பெற வேண்டியது அவசியமாகும்.

