Last Updated:
பால்கனியில் இருந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த மெஸ்ஸியைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் சிறுவர்கள் அவரது பெயரை முழக்கமிட்டு வரவேற்றனர்.
2026 ஃபீஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா அடைந்த தோல்விக்கு பிறகு, அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) முதல்முறையாகப் பொதுவெளியில் நேரில் தோன்றியுள்ளார். தனது சொந்த ஊரான ரொசாரியோவுக்கு அருகே உள்ள அன்டோனியோ டி ஜியாகோமோ மைதானத்தில், தனது குடும்பத்தினர் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ‘லியோனஸ் எஃப்.சி’ (Leones FC) மற்றும் சென்ட்ரல் கோர்டோபா அணிகளுக்கு இடையே நடைபெற்ற அர்ஜென்டினாவின் 4-வது டிவிஷன் (Primera C) போட்டையைக் காண மெஸ்ஸி வருகை தந்திருந்தார்.
கருப்பு நிற ஹூடி (Hoodie) அணிந்து தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் இரகசியமாகப் போட்டியைக் காண முயன்றபோதிலும், மைதானத்தில் இருந்த ரசிகர்களின் கேமராக்களிலும் தொலைக்காட்சி கேமராக்களிலும் அவர் படம்பிடிக்கப்பட்டார்.
பால்கனியில் இருந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த மெஸ்ஸியைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் சிறுவர்கள் அவரது பெயரை முழக்கமிட்டு வரவேற்றனர். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக 39 வயதான மெஸ்ஸி புன்னகையுடன் கைகளை அசைத்து வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். இருப்பினும், இப்போட்டியில் லியோனஸ் எஃப்.சி அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இதனிடையே, வரவிருக்கும் மேஜர் லீக் சாக்கர் (MLS) ஆல்-ஸ்டார் போட்டியில் லியோனல் மெஸ்ஸி விளையாடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி வரை விளையாடி தீவிரமான உடலுழைப்பை அளித்ததால், வீரர்களுக்குப் போதிய ஓய்வு அளிக்க லீக் நிர்வாகம் மற்றும் வீரர்கள் சங்கத்தின் ஒப்பந்தப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸி விரைவில் தனது கிளப் அணியான இன்டர் மியாமிக்குத் (Inter Miami) திரும்பி பயிற்சி பெறவுள்ளார்.


