மின்சார உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுப் பல பகுதிகளில் மின்விநியோகத்தைப் பாதித்த நபர் ஒருவருக்கு, இலங்கை மின்சார சபைக்கு (CEB) ஏற்பட்ட ரூ. 201,059.90 இழப்பீட்டைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்புறுபிட்டிய பகுதியில் குடும்பத் தகராறு தொடர்பாக எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் சந்தேகநபர் உயர் அழுத்த மின்பரிமாற்றக் கம்பத்தில் ஜூலை 21ஆம் திகதி ஏறியுள்ளார்.
இதன் காரணமாக திஹகொட, கம்புறுபிட்டிய, அக்குரெஸ்ஸ, முலட்டியான, தெய்யந்தர, மாவரல, தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
பின்னர், பொலிஸார் அவரது குடும்பத்தினரைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததைத் தொடர்ந்து, அவர் கீழே இறங்கச் சம்மதித்தார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, முதலில் ஜூலை 24 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணக்கிடுமாறு நீதிமன்றம் கம்புறுபிட்டிய பொலிஸாருக்கு ஜூலை 24 அன்று, உத்தரவிட்டது. பின்னர் அவர் ஜூலை 28 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஜூலை 28 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இலங்கை மின்சார சபைக்கு ரூ. 201,059.90 இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபருக்கு, அந்த முழுத் தொகையையும் இலங்கை மின்சார சபைக்கு இழப்பீடாகச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


