உக்ரைன் மற்றும் அமெரிக்காவுடனான முத்தரப்புப் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தாம் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைனில் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் மற்றும் பன்னாட்டு ராஜதந்திர அழுத்தங்கள் அதிகரித்து வரும் சூழலில் ரஷ்யாவிடமிருந்து வந்துள்ள இந்த அறிவிப்பு சர்வதேச அரங்கில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
பேச்சுவார்த்தை
போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று தரப்புகளும் நேரடியாகப் பங்கேற்கும் வகையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கிரெம்ளின் (Kremlin) வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதேவேளை, உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் (Volodymyr Zelenskyy) தற்போதைய போர் எல்லைக் கோடுகளின் அடிப்படையில் அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான சுமுகமான சூழலை உருவாக்கும் நோக்கில் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பிரஜை ஒருவரை விடுவிக்குமாறு புடின் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கத் தரப்பின் அமைதித் திட்டப் பிரதிநிதிகளுடனான உயர்மட்டச் சந்திப்புகளைத் தொடர்ந்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

