ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், தனது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் எதிர்ப்பை ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் வெளியிட்டதுடன், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஒருபோதும் தமது நாடு மண்டியிடாது என கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பெசெஷ்கியான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி ஈரானைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
“அவர்கள் எங்களைத் தாக்கினார்கள். ஆனால் நாங்கள் மண்டியிடவில்லை; எங்கள் தலையைத் தாழ்த்தவில்லை” என்ற கருத்தை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம்
மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்த பெசெஷ்கியான், அந்தத் திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கானது என்று ஈரான் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அணுசக்தித் திட்டத்தை மட்டுப்படுத்தும் அழுத்தத்திற்கு தாம் இணங்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வலிமையைப் பயன்படுத்தும் மொழியை ஏற்றுக்கொள்ளாமல், பேச்சுவார்த்தைக்கும் இராஜதந்திரத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற நிலைப்பாட்டையும் பெசெஷ்கியான் முன்வைத்துள்ளார்.
ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள் பதிலடி கொடுக்கவே உருவாக்கப்பட்டவை. ஈரான் நகரங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்க முடியாத நிலை ஏற்படாத வகையில் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
தனது நாட்டின் பாதுகாப்பு திறன் தாக்குதலுக்காக அல்ல, பாதுகாப்புக்காகவே இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தனது உரையின்போது பெசெஷ்கியான், ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள மினாப் நகரில் தாக்குதலில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகளின் புகைப்படங்களையும் பொதுச் சபையில் காண்பித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

