ஈரானின் இந்த நடவடிக்கைகள் ஒரு தவறான முடிவு என்றும், இதற்காக அந்த நாடு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று (12) உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் சைப்ரஸ் நாட்டு சரக்குக் கப்பல் (M/V GFS Galaxy) தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) ஈரான் மீது இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் தென் கடற்கரைப் பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் (Bandar Abbas), சிரிக் (Sirik), சாபஹார் (Chabahar), பந்தர்-இ டெய்ர் (Bandar-e Deyr) மற்றும் அசாலுயே (Asaluyeh) ஆகிய முக்கிய துறைமுக நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் இந்த வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் நான்கு மாகாணங்களில் உள்ள இராணுவ மற்றும் வணிக ரீதியான இடங்களை இலக்காகக் கொண்டுள்ளன. குறிப்பாக, அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷெர் (Bushehr) மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் தாக்கப்பட்டன,
இருப்பினும், அணுமின் நிலையத்துக்குச் சேதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. ஜஸ்க் (Jask) நகரில் மட்டும் குறைந்தது 10 வெடிப்புகள் நிகழ்ந்தன.
அமெரிக்காவின் இந்தத் தலையீட்டைக் காரணம் காட்டி, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்துள்ளது. சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தில் மிக முக்கியமான இந்த நீர்சந்தியின் மீதான அதிகாரப்போட்டியே இந்த மோதலின் மையப்புள்ளியாக உள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கைகள் ஒரு தவறான முடிவு என்றும், இதற்காக அந்த நாடு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) எச்சரித்துள்ளார்.
இதேவேளை, ஈரானிலிருந்து வந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தனது வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்ததாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை உயர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கட்டார் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பஹ்ரைனில் விமானத் தாக்குதலுக்கான அபாயத் சத்தங்கள் (Sirens) ஒலிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா – ஈரானின் இந்த மோதல் காரணமாகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்துள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில் இந்த பதற்றம் மேலும் நீடிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

