Last Updated:
விவசாய செலவு உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, விலை நிலைத்தன்மை இல்லாமை—தமிழக விவசாயிகள் பல சவால்களில் சிக்கியுள்ளனர்.
தமிழகத்தில் விவசாயம் இன்று பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உற்பத்தி செலவுகள் உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை, விளைபொருட்களுக்கு நிலையான விலை இல்லாமை, நடுவண் வியாபாரிகளின் ஆதிக்கம் ஆகியவை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகின்றன. மேலும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் முழுமையாக பயன் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. காலநிலை மாற்றம், கடன் சுமை, நில ஆவண சிக்கல்கள் போன்றவை விவசாயத்தை மேலும் சிரமப்படுத்துகின்றன.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தனபதி தனது கவலைகளை பகிர்ந்துள்ளார். புதுக்கோட்டை ஒரு மானாவாரி மாவட்டமாக இருப்பதால், இங்குள்ள விவசாயம் பெரும்பாலும் மழை சார்ந்ததாக உள்ளது. “மழை பெய்தால்தான் எங்களுக்கு விவசாயம் செய்ய முடியும். நிலத்தடி நீர் மிகவும் குறைவாக உள்ளது,” என அவர் கூறுகிறார்.
மேலும், விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. விவசாய வேலைகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம், பயிர் காப்பீடு திட்டங்கள் சரியாக செயல்படாதது, கிடைக்கும் சலுகைகள் தரமற்றதாக இருப்பது போன்ற பிரச்சினைகளும் தொடர்கின்றன.
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். குறிப்பாக, காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். அதேபோல், சமவெளி காடுகளில் உள்ள தைல மரங்களை அகற்றி, அதற்கு பதிலாக பயனுள்ள நாட்டு மரங்களை நட்டிட வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகும். “விவசாயிகளுக்கு மானியங்கள் அல்லது சலுகைகள் மட்டும் போதாது.
அதற்கு பதிலாக, ஒரு ஏக்கருக்கு நிரந்தர உரிமைத் தொகை வழங்கினால் அது எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். மேலும், இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும்,” என தனபதி கோரிக்கை விடுக்கிறார். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அது விவசாயிகளின் வாக்குப்பதிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

