
இலங்கைக்கு மேற்கொண்டிருந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் கொழும்பிலிருந்து இந்தியா திரும்பினார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தனது இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்து இன்று (20) கொழும்பு நகரிலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டார்.
இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்களுடன் பல முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டார். குறிப்பாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஹரிணி அமரசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் தனித்தனியாக கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடனும், மலையக அரசியல் பிரதிநிதிகளுடனும் அவர் சந்திப்பு நடத்தினார்.
இத்துடன், மலையகப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாற்றியதுடன், மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.
இந்த விஜயம், இந்தியா–இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.

