
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ளும் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது நேற்று (14) சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சைபர் தாக்குதலின் காரணமாக, இணையத்தளத்தின் சில சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயணிகள் அதிகளவில் பயன்படுத்தும் ரயில்களின் நேர அட்டவணை மற்றும் பயணத் தகவல்களை அறியும் பகுதி தற்போது இயங்காத நிலையில் இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ளும் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எனினும், ரயில் சேவைகளின் இயல்பான செயற்பாடுகளில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதலின் தன்மை மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, இணையத்தளத்தை மீண்டும் முழுமையாக செயல்படும் நிலைக்கு கொண்டுவருவதற்கான அவசர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் மாற்று தகவல் வழிகள் ஊடாக ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் இணையத்தள சேவைகள் மீளமைக்கப்படும் நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

