இரவில் முகேஷ் அம்பானி-க்கு வந்த நியூஸ்.. ஜியோ ஐபிஓ-வுக்கு முன்பு இப்படியொரு விஷயமா..?
இந்தியா முழுக்க முதலீட்டாளர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் டெலிகாம் சேவை பிரிவான ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ நாளை ரீடைல் முதலீட்டாளர்களுக்கான கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் ஆங்கர் முதலீட்டாளர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
எந்தொரு ஐபிஓ-வாக இருந்தாலும் ஆங்கர் முதலீட்டாளர்கள் காட்டும் வரவேற்பு தான் அந்த ஐபிஓ-வின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதால் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய திட்டமிடுவோர் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த ஆங்கர் முதலீட்டாளர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

ஜியோ நிர்வாகம் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7,24,74,066 பங்குகளை 1,119 ரூபாய் விலையில் ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் சுமார் 31 மடங்கு அதிக முதலீட்டு விருப்பத்தை ஆங்கர் முதலீட்டாளர்கள் காட்டியுள்ளனர். நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் அரிதாகக் காணப்படும் இத்தகைய ஆர்வம் ஜியோ நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
ஆங்கர் முதலீட்டாளர்கள் வாயிலாகப் பிள்ளையார் சுழி போட்டுள்ள முகேஷ் அம்பானி – ஆகாஷ் அம்பானி டீம்க்கு சுமார் 8110 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற்றுள்ளது. மேலும் ஆங்கர் முதலீட்டாளர்கள் வாயிலாக மட்டுமே சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு விருப்பம் வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆங்கர் முதலீட்டாளர்கள் சுற்றில் எல்ஐசி, நியூ வோல்டு பண்ட், சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனம் ஆகியவை அதிகளவிலான முதலீட்டைச் செய்து டாப் 3 இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதை தாண்டி பிளாக்ராக், கேப்பிடல் குரூப், பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட், டி.ரோவி ப்ரைஸ், ஜேபி மோர்கன் அசர்ட் மேனேஜ்மென்ட், பிரான்கிளின் டெம்பிள்டன், இன்வெஸ்கோ, Schroders என உலகின் பல முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.
இதேபோல் உள்நாட்டு டாப் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் அனைவரும் முதலீடு செய்து 2.489 கோடி பங்குகளைக் கைப்பற்றி ஆங்கர் புக்கில் சுமார் 34.34 சதவீத பங்கைப் பெற்றுள்ளனர். சுமார் 25 மியூச்சுவல் பண்ட் நிறுவனம் 95 திட்டத்தின் கீழ் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்பானி வீட்டில் இண்டர்நெட் சரியாக இல்லை என்ற விரக்தியில் ஜியோ உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் வேளையில், ஜியோ-வின் மாபெரும் ஐபிஓ-வுக்கு இந்த ஆங்கர் முதலீட்டு மிகவும் சிறப்பான துவக்கமாக இருக்கப்போகிறது. ஆங்கர் முதலீட்டாளர்கள் குறித்த விபரம் திங்கட்கிழமை இரவு 8 – 9 மணிக்கு வெளியானது.
இதேவேளையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் உலக நாடுகளில் பல முதலீட்டு வல்லுனர்கள் கடந்த 2 வாரங்களாக ஏஐ பபுள் வெடித்தால் பாதிக்காத சந்தை இந்தியச் சந்தை தான் எனவும், இதற்கு காரணமாக இந்தியா ஏஐ சார்ந்த முதலீடுகளைப் பெறவில்லை எனவும் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாகக் கடந்த வாரம் முழுக்க இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வந்தது, ஆனால் நேற்று 1000 புள்ளிகள் சரிந்து 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை முதலீட்டை இழந்துள்ளது இந்திய பங்குச்சந்தை. இன்று விடுமுறை என்பதால் பங்குச்சந்தை மூடப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்கு ஏஐ முதலீட்டு சந்தை சார்ந்த பெரும் சம்பவம் வெடிக்கும் என கணிக்கப்பட்டு உள்ள காரணத்தால் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் பாதுகாப்பான முதலீட்டைத் தேடி வருகிறது.

