இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை. எனினும், கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்மலானை ஞானேந்திர பாதையில் அமைந்துள்ள இருமாடி வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நான்கு சந்தேகநபர்களும், மொரட்டுவை மற்றும் இரத்மலானை பகுதிகளில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி, ஞானேந்திர பாதையில் அமைந்துள்ள குறித்த இருமாடி வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டிருந்தன.
இதில் ஒரு கைக்குண்டு வீட்டின் மீது விழுந்து வெடித்துச் சிதறியிருந்த நிலையில், மற்றைய கைக்குண்டு வீட்டின் தோட்டப் பகுதியில் விழுந்திருந்தது. பின்னர் அந்த கைக்குண்டை பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை. எனினும், கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் முக்கிய தகவல்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய அதிகாரிகள், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மொரட்டுவை மற்றும் இரத்மலானை பகுதிகளில் வைத்து நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21, 26, 28 மற்றும் 30 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மொரட்டுவை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரின் வழிகாட்டலின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு இடையே நிலவி வரும் தகராறு மற்றும் மோதலே இந்த கைக்குண்டுத் தாக்குதலுக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் பின்னணியில் மேலும் நபர்கள் தொடர்புபட்டுள்ளனரா, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கைக்குண்டுகள் எவ்வாறு பெறப்பட்டன என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

