Last Updated:
விமான எரிபொருள் விலையை மாற்றியமைக்கக் கோரியும், மத்திய அரசிடம் அவசர நிதியுதவி கோரியும் விமான நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.
விமான எரிபொருள் விலையை குறைக்காவிட்டால், விமான சேவைகள் நிறுத்தப்படும் என மத்திய அரசுக்கு விமான நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.
மேற்கு ஆசியப் போர் காரணமாக, மத்திய அரசு அண்மையில் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருளை லிட்டருக்கு 73 ரூபாயும், உள்நாட்டு விமான சேவைகளுக்கு லிட்டருக்கு 15 ரூபாயும் அதிகரித்தது. ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய முன்னணி விமான நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை மாற்றியமைக்கக் கோரியும், மத்திய அரசிடம் அவசர நிதியுதவி கோரியும் கடிதம் எழுதியுள்ளன.

அதில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் விமான சேவைகள் நிறுத்தப்படும் அல்லது நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஒரு விமான நிறுவனத்தின் மொத்த செலவில் சுமார் 40% எரிபொருளுக்காகவே செலவிடப்படுவதாகவும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலையில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்று ‘பெடரேஷன் ஆஃப் இந்தியன் ஏர்லைன்ஸ்’ (FIA) கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது விதிக்கப்படும் 11% கலால் வரியைத் (Excise Duty) தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி (VAT) சுமையைக் குறைக்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.


