இன்ஸ்டாகிராம் , யூடியூப்-இல் வரும் பணத்திற்கு வருமான வரியா? ஆகஸ்ட் 31 தான் கடைசி தேதி..!!
இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களில் தங்களுக்கு என ஒரு சேனல் வைத்து பணம் சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஃபாலோவர்கள், வியூஸ்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வருமானம் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் விஜே சித்து, பரிதாபங்கள், மதன் கௌரி, மெட்ராஸ் சமையல் போன்றவை பிரபலமான சேனல்களாக உள்ளன. யூடியூப் விளம்பரங்கள் , இன்ஸ்டாகிராம் பிராண்ட் கொலாபரேஷன்ஸ் , சந்தாக்கள் என பல வழிகளில் கிரியேட்டர்கள் வருமானம் பார்க்கின்றனர். இந்த வருமானம் நம் நாட்டின் வருமான வரி சட்டங்களுக்கு உட்பட்டதா என்பது தான் கேள்வி. சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா அவர்களுக்கு ஐடி நோட்டீஸ் வருமா என்ற தகவல்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தணிக்கை (Audit) தேவையில்லாத வணிக மற்றும் தொழில் வருமானம் ஈட்டுவோருக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆகும். கண்டண்ட் கிரியேட்டர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் இந்த தேதிக்குள் கணக்கு தாக்கல் செய்யவேண்டும். ஆரம்பத்தில் பார்ட் டைம் முறையில் வீடியோக்களை பதிவிட்டு சிறிய அளவில் பணம் ஈட்டுபவர்கள் இதனை ஒரு பொழுதுபோப்பாக நினைக்கலாம். ஆனால், இது தொடர்ந்து வருமானம் தரும் ஒரு முக்கிய விஷயமாக மாறும்போது, வருமான வரித்துறை இதனை வணிகம் அல்லது தொழிலில் இருந்து கிடைக்கும் லாபம் (Profits and Gains from Business or Profession) என்ற பிரிவின் கீழ் வரையறை செய்கிறது. எனவே, இதில் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரி செலுத்த வேண்டும்.
ஒரு கிரியேட்டருக்கு யூடியூப் ஆட்சென்ஸ் (AdSense), பிராண்ட் ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள், Affiliate links, பயிற்சி வகுப்புகள், பிராண்டுகள் பரிசாக வழங்கும் பொருட்கள் ஆகிய வழிகளில் வருமானம் கிடைக்கிறது. எனவே கிரியேட்டர்கள் இவற்றை சரியாக கணக்கிட்டு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி தாக்கல் செய்யும் போது ITR-3 அதாவது வணிகம் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக்குடும்பத்தினருக்கு (HUF) பொருந்தும் படிவத்தை தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு கிரியேட்டரின் மொத்த டர்ன் ஓவர் 20 லட்சத்திற்கு மேல் இருந்தால் அவர்கள் கட்டாயம் ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும். பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் சேவைகளுக்கு பொதுவாக 18% ஜிஎஸ்டி பொருந்தும். பிராண்டுகளுக்கு செய்யும் விளம்பரங்களுக்கு TDS பிடிக்கப்படலாம். பிராண்டுகளால் வழங்கப்படும் இலவச பொருட்கள் அல்லது பரிசுகளுக்கும் சில வரி விதிமுறைகள் பொருந்தக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
சமூக வலைதள வருமானம் மட்டுமே பிரதானம் என்பவர்களும் பகுதி நேரமாக இதன் மூலம் வருமானம் ஈட்டுபவர்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்கிறது வருமான வரித்துறை. இது எதிர்கால சிக்கல்களை தவிர்க்க உதவும் என்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

