Last Updated:
இந்த லோகோவைப் பயன்படுத்த விரும்பும் உணவு தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்பில் விலங்குப் பொருட்கள் இடம்பெறவில்லை என உறுதி செய்ய வேண்டும்.
வீகன் உணவுகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் உணவுப் பொட்டலங்களில் அதற்கான லோகோ கட்டாயம் அச்சிடப்பட வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சந்தைகளில் எண்ணற்ற பொட்டல உணவுகள் விற்கப்படும் நிலையில் அவை சைவமா அசைவமா முட்டை மட்டும் சேர்க்கப்பட்ட உணவா என அறிந்துகொள்ள அதில் பிரத்யேகமான லோகோக்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் வீகன் உணவுகளை நுகர்வோர் தனியாக அடையாளம் காணும் வகையில் அதற்கான லோகோக்கள் இடம்பெறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த உத்தரவு முழுமையாக அமலுக்கு வருவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. பச்சை நிற சதுர வடிவத்துக்குள் ‘V’ என்ற ஆங்கில எழுத்தும் அதன் மேல் ஒரு இலையைக் கொண்டும் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ‘V’ என்ற எழுத்துக்குக் கீழே “VEGAN” என்ற வார்த்தையும் அச்சிடப்பட்டிருக்கும்.
இந்த லோகோவைப் பயன்படுத்த விரும்பும் உணவு தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்பில் விலங்குப் பொருட்கள் இடம்பெறவில்லை என உறுதி செய்ய வேண்டும். விற்பனையாளர்கள் இந்த லோகோவைத் தங்களது தயாரிப்புகளுக்குப் பயன்படுத்துவதற்கு உரிய அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீகன் உணவை உட்கொள்பவர்களைப் பொருத்தவரை அசைவத்தை தவிர்ப்பது மட்டுமல்லாமல், பால், தயிர், நெய், தேன் போன்ற விலங்கு சார்ந்த எந்தப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள். விலங்குகள் மூலம் கிடைக்கும் துணி வகைகள், அணிகலன்கள், அழகு சாதனப் பொருட்களையும் வீகன் முறையை பின்பற்றுபவர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai,Tamil Nadu


