India
oi-Halley Karthik
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியின் அவல நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ள காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) தலைவர் அபிஜித் தீப்கே.. இதுபோன்ற பள்ளிகளில் அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பார்களா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அபிஜித் தீப்கே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். பாலகாட்டின் பிர்சா மற்றும் பைஹார் போன்ற பழங்குடியின பகுதிகளில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளிகள் மிகவும் மோசமானதாக இருப்பது இந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

பள்ளிகள் சிதிலமடைந்த நிலையில், சுத்தமான குடிநீர் இல்லாமல் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கிறது. மாணவிகளுக்கான தனி நபர் கழிவறைகள் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளன. பல மாதங்களாக குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் முறையாக வழங்கப்படவில்லை.
இவ்வளவு மோசமான உள்கட்டமைப்பை சுட்டிகாட்டியுள்ள அபிஜித், அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளை இங்கு அனுப்புவார்களா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். நாட்டின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் நவீன வசதிகள் கொண்ட சர்வதேச பள்ளிகளிலும், வெளிநாடுகளிலும் படிக்கும் நிலையில்.. பூர்வகுடி பழங்குடி குழந்தைகள் அடிப்படை பாதுகாப்பற்ற சூழலில் கல்வி கற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த இரட்டை நிலைப்பாடுதான் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை எற்படுத்தியிருக்கிறது.
ஊட்டச்சத்து மிக்க உணவுக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். உணவுக்கு மட்டுமல்லாது.. அந்த உணவை சமைத்து தரும் ஆஷா சத்துணவு ஊழியர்களுக்கும் ஊதியம் சரியாக வழங்க வேண்டும். ஆனால், கடந்த 6 மாதங்களாக தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஊக்கத்தொகை மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என பாலகாட் பள்ளியில் பணியாற்றும் ஆஷா ஊழியர்கள் கூறியுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவது, கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி மற்றும் சுகாதாரத் கணக்கெடுப்பு போன்ற அனைத்து அடிமட்ட வேலைகளையும் செய்தும் இவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
இதனால் ஆஷா பணியாளர்களின் வேலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இது இந்த பகுதியில் பொது சுகாதாரத்தை முழுமையாக பாதித்திருக்கிறது. பள்ளிகள் மற்றும் கிராமங்களில் நிலவும் இந்த மோசமான சுகாதார சீர்கேடு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஆஷா பணியாளர்களின் முடக்கம் காரணமாக சமீபத்திய நாட்களில் பாலகாட்டில் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தட்டம்மை, மலேரியா, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அசுத்தமான குடிநீரால் பரவிய தொற்றுகள் காரணமாகவே இக்குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய-மாநில அரசுகளின் கூட்டு விசாரணைக்குழு தெரிவித்திருக்கிறது. இப்பகுதியில் உள்ள 50 படுக்கைகள் கொண்ட சிறிய அரசு மருத்துவமனையில் தற்போது சுமார் 400க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு நெரிசலான சூழலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அவல நிலை குறித்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஜபல்பூர் அமர்வு, அம்மாநில சுகாதாரத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் பாலகாட் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு தற்போது நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.


