Last Updated:
ஜியோவின் பங்குச்சந்தை வெற்றிக்குக் காரணமான ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் செயல் இயக்குநர் அனந்த் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அனந்த் அம்பானி, ஜியோவின் மாபெரும் வெற்றிக்கும், அது பங்குச்சந்தையில் காலடி எடுத்து வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளுக்கும் ஜியோ ஊழியர்களும் வாடிக்கையாளர்களுமே காரணம் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த விழாவில் பேசிய அவர், “மழையிலும் வெயிலிலும் பார்க்காமல் டவர்களில் ஏறி வேலை செய்த ஊழியர்கள், பொறியாளர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என அனைவரின் உழைப்பால்தான் ஜியோ இன்று இந்த இடத்தில் இருக்கிறது. இந்த நாள் உங்களுடையது; உங்கள் உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது” என்றார்.
ஊழியர்களின் கடின உழைப்பு இப்போது பலனளித்து வருவதாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு நிகழ்வாக இந்த பங்கு பட்டியல் வெளியீட்டு நிகழ்வு அமைந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
ஊழியர்களுக்கு அடுத்து ஜியோவை நம்பும் 53 கோடி வாடிக்கையாளர்களுக்கும் அனந்த் அம்பானி தனது நன்றியைத் தெரிவித்தார். “ஜியோவை உருவாக்கியதே நீங்கள் தான்; உங்கள் கனவுகளை நனவாக்குவதே எங்கள் கனவு” என்று கூறினார்.
மாணவர்களின் படிப்புக்கும், குடும்பங்கள் பேசிக்கொள்வதற்கும், மக்களின் வேலைகளுக்கும் ஜியோ பெரிதும் உதவியாக இருப்பதை சுட்டிக்காட்டினார். ஜியோவின் இந்த பெரிய வெற்றிக்குப் பின்னால் இருந்து உழைத்த அத்தனை சாமான்ய மனிதர்களுக்கும் இந்த நாளை அனந்த் அம்பானி சமர்ப்பித்துள்ளார்.


