Last Updated:
அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார். இந்தியாவும் தப்பாது என மோடியை சந்திக்கும் முன் தெரிவித்தார்.
அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, அமெரிக்கா பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலுக்கு பதில் வரி விதிக்கும் சட்டத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “அமெரிக்க பொருட்களுக்கு சில சிறிய நாடுகள் கூட அதிக வரி விதிப்பதாகக்” கூறினார். ஆனால், இந்தியா அளவுக்கு அதிகமாக வரி விதிப்பதாகவும் விமர்சித்தார். அதிக வரி விதிப்பின் காரணமாக அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அதனால், இந்தியாவிலேயே உற்பத்தி ஆலையை தொடங்க நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
மற்ற நாடுகள் விரும்பினால் அமெரிக்காவில் மருத்துவம், கார் உற்பத்தி, செமி கண்டக்டர் போன்ற ஆலைகளை தொடங்கலாம் என்றும் டிரம்ப் அழைப்பு விடுத்தார். மேலும், “அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை அப்படியே தாங்களும் பின்பற்றுவோம்” எனக் கூறியதுடன், “இந்தியாவும் தப்பாது” என பிரதமர் மோடியை சந்திக்கும் முன் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து வாழ்த்தினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பாராட்டு தெரிவித்தார். அதிபர் டிரம்பை போலவே, இந்தியாவின் நலன்களை உயர்வாக வைத்து பணியாற்றுவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர் என்று புகழாரம் சூட்டினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 14, 2025 6:49 AM IST
“இந்தியாவும் தப்பாது” – பிரதமர் மோடி சந்திப்புக்கு சில நிமிடங்கள் முன் டிரம்ப் போட்ட உத்தரவு!