International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, சிந்து நதி நீர் திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. இதற்கிடையே தொடர்ந்து இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் பேசி வரும் பாகிஸ்தான் இப்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியிருக்கிறது. அதாவது சிந்து நதி நீர் மீதான உரிமை பாகிஸ்தானுக்கே இருப்பதாகவும் இதற்காக இந்தியாவுடன் போரிடவும் ரெடியாக இருப்பதாகப் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்தாண்டு அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்து கோழைத்தனமான தாக்குதலை நடத்தினர். பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைக் காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.

இந்தியா
அப்போதும் கூட இந்தியா இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்யவில்லை. தீவிரவாதத்திற்கு எதிராகப் பாகிஸ்தான் உண்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிந்து ஒப்பந்தத்தைப் பின்பற்ற முடியும் என்றும் இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டது. தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இந்த நீர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பி வருகிறது.
இந்தச் சூழலில் தான் மீண்டும் பாகிஸ்தான் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தலைமையில் அங்கு 276வது கார்ப்ஸ் கமாண்டர்கள் மாநாடு நடைபெற்றது. பாகிஸ்தான் அரசின் வழிகாட்டுதலின்படி அந்நாட்டின் நீர் உரிமையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் அந்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்புக் குழு வெளியிட்ட வழிகாட்டுதலையும் இந்த மாநாடு உறுதி செய்தது.
போருக்கு ரெடி
கடந்தாண்டு தேசிய பாதுகாப்புக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சிந்து நதியின் நீரைத் தடுத்து நிறுத்துவது அல்லது திசைதிருப்புவது போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவம் முழு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு நடுவே பிலாவல் புட்டோ சர்தாரி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. அதில் அவர், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் எந்த சமரசமும் கிடையாது. அதற்காக இந்தியாவுடன் போர் செய்ய வேண்டியிருந்தாலும் பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
பாகிஸ்தான்
இந்தியாவைப் பொறுத்தவரைப் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்பதில் தெளிவாக இருக்கிறது. அதன் பிறகும் கூட தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக.. பாகிஸ்தான் இந்தியாவை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.
சிந்து ஒப்பந்தம்
1960ஆம் ஆண்டு உலக வங்கியின் ஏற்பாட்டின்படி சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய கிழக்கு நதிகளின் கட்டுப்பாடு இந்தியாவுக்கு இருக்கும். சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகளின் நீர்ப் பயன்பாடு பாகிஸ்தானுக்கு இருக்கும். ஆனால், இப்போது இந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் அனைத்து நதிகளின் மீதும் இந்தியாவுக்கு உரிமை இருக்கிறது. வெள்ள எச்சரிக்கை உள்ளிட்ட எந்தவொரு தகவல்களைப் பகிர வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இல்லை. மேலும் சாவல்கோட், ரட்லே, புர்சார், பகல் துல் உள்ளிட்ட பல நீர்மின் திட்டங்களையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை இது மிக பெரிய அடியாகவே இருக்கிறது. அங்கு ஓடும் நீரையும் தடுத்து நிறுத்தும் வகையிலான உட்கட்டமைப்பை இந்தியா ஏற்படுத்திவிட்டால் அது பாகிஸ்தானுக்கு மிக பெரிய அடியாக இருக்கும். ஏனென்றால் பாகிஸ்தான் விவசாயத்தில் சுமார் 80 முதல் 90 சதவீதம் வரை சிந்து நதிகளையே நம்பி இருக்கிறது.



