Last Updated:
ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் உள்ள இந்தியாவின் கலாசாரப் பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்தார். திருவாரூர், தஞ்சை சிலைகள் திரும்பப் பெறப்படும்.
ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியாவின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி முன்னிலையில் ஊடகங்களிடம் பேசிய அவர், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலிய மூதாதையரின் உடல் எச்சங்களை, எந்த நிபந்தனையும் இன்றி திருப்பி ஒப்படைக்க இந்தியா முன்வந்திருப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய பிரதமரின் அறிவிப்புபடி, திருவாரூர் மாவட்டம் கொள்ளுமாங்குடி காசி விஸ்வநாத சுவாமி கோயிலைச் சேர்ந்த பத்திரகாளியின் உருவம் பதித்த திருசூலம் மற்றும் நந்தி சிலைகள் மீண்டும் ஒப்படைக்கப்படவுள்ளது.
இவை கிபி 13 முதல் 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்து சிலைகள் எனத் தெரியவந்துள்ளது. அதேபோல, தஞ்சை மாவட்டம் மணம்பாடி நாகநாதசாமி கோயிலைச் சேர்ந்த ஆறு தலை கொண்ட முருகன் சிலை மீண்டும் இந்தியா வசம் வரவுள்ளது. இது கிபி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்து சிலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jul 09, 2026 10:45 PM IST


