இதுதான் தான் பணியாற்றும் கடைசி தொடர் என்றும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு மீண்டும் விண்ணப்பிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார் ராகுல் ட்ராவிட்.
இதையடுத்து புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதில் பிசிசிஐ முனைப்புக் காட்டி வருகிறது. இதில் வி.வி.எஸ் லட்சுமணன், ஆஷிஷ் நெஹ்ரா, கவுதம் கம்பீர் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. புதிய தலைமைப் பயிற்சியாளராக பிசிசிஐ யாரைத் தேர்வு செய்யப்போகிறது என்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு அழைப்பு வந்ததாகவும், அதை அவர்கள் மறுத்து விட்டதாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்குப் பதிலளித்திருந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “நாங்கள் எந்த வெளிநாட்டு வீரர்களையும் அணுகவில்லை. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்களைத் தான் தேர்வு செய்வோம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் ட்ராவிட், “தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றுவதை நான் மிகவும் நேசித்துச் செய்து வருகிறேன். அதிக பொறுப்புகள் இருக்கும் மதிக்கத்தக்கப் பதவி இது. திறமையான இந்திய அணி வீரர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு ரொம்ப ஸ்பெஷலான அனுபவம் இது.
இப்பொறுப்பைப் பெற்ற முதல் நாளிலிருந்து, கடைசி நாள் வரையும் மிகுந்த நேர்மையுடன், அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு போட்டியையும் முக்கியமான போட்டியாக நினைத்து எனது முழு உழைப்பைச் செலுத்தியிருக்கிறேன். இது என் வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத நாள்களாக இவை இருக்கும். இப்பொறுப்பில் நான் பணியாற்றும் கடைசித் தொடர் இந்த டி 20 உலகக் கோப்பைத் தொடர்தான். அதில் எந்தச் சந்தேகவும் வேண்டாம். மீண்டும் நான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பிக்கப் போவதில்லை” என்று தெளிவாகக் கூறியுள்ளார்.


