Cricket
oi-Yogeshwaran Moorthi
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தியுள்ளார். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 167 ரன்களை விளாசிய படிக்கல், தற்போது 2வது டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் இந்திய அணியின் நீண்ட நாள் நம்பர் 3 பேட்ஸ்மேனாக படிக்கல் ஆடுவார் என்று பார்க்கப்படுகிறது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வென்றிருப்பதால், இலங்கை அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இதன்பின் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்ட சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணிக்காக சரன்ஷ் ஜெய்ன் அறிமுகம் செய்யப்பட்டு குல்தீப் யாதவ் பெஞ்ச் செய்யப்பட்டார்.

இதன்பின் களமிறங்கிய கேஎல் ராகுல் 18 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 45 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் ரன் ஏதும் எடுக்காத போது ஒரு கேட்ச் கொடுத்தார். அதனை சோனல் கோட்டைவிட, மீண்டும் 1 ரன் எடுத்திருந்த போது ஒரு கேட்ச் கொடுத்தார். அதனை தனஞ்செயா கோட்டைவிட்டார். இந்த வாய்ப்பை தேவ்தத் படிக்கல் அற்புதமாக பயன்படுத்தி கொண்டார்.
இதன்பின் கவனமாக ஆடிய தேவ்தத் படிக்கல் தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசி, நிதானமாக ரன்களை சேர்த்தார். சிறப்பாக ஆடிய அவர் 90 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இலங்கை பவுலர்களால் படிக்கலுக்கு எந்தவித தொல்லையையும் கொடுக்க முடியவில்லை. இவரும் சுப்மன் கில்லும் சிறப்பாக ஆடி இந்திய அணியின் ரன்களை உயர்த்தினார்.
ஆனால் சுப்மன் கில் ஒரு சிறிய கவன சிதறலால் 50 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் மறுபக்கம் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் படிக்கல் சதத்தை நோக்கி முன்னேறி வந்தார். ஒரு கட்டத்தில் ஸ்பின்னர்கள் கடமைக்கு பவுலிங் செய்வது போல் இருக்க, படிக்கல் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி 168 பந்துகளில் 10 பவுண்டரி உட்பட சதத்தை எட்டி சாதனை படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் படிக்கல் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 167 ரன்களை விளாசிய தேவ்தத் படிக்கல், இந்த போட்டியிலும் சதம் விளாசி அசத்தினார். இறுதியாக 193 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு இந்திய அணி வீரர்கள் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர்.

