இணைய உலகை அதிரவைத்த பெங்களூர் eMudhra நிறுவனம்.. 4, 56, 66, 115.. என்ன பாஸ்வோர்டு இது ..?!
எஸ்பிஐ வங்கி மீதான சைபர்தாக்குதலை தொடர்ந்து அடுத்த பெரிய பாதுகாப்புப் பிரச்சனை இந்தியாவில் வெடித்துள்ளது, 2008ஆம் ஆண்டு பெங்களூரில் துவங்கப்பட்ட ஒரு டிஜிட்டல் சான்றிதழ் அளிக்கும் நிறுவனமான eMudhra கொடுத்த 8 சான்றிதழ் மிகவும் பலவீனமான செக்யூரிட்டி கீ உடன் அளிக்கப்பட்டு உள்ளது இண்டர்நெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பெங்களூர் நிறுவனமான eMudhra இதுவரையில் 6 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்கியுள்ளது. இத்தகை பெரும் பாதுகாப்பு குறைபாடு இருக்கும் காரணத்தால் கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், மோஜில்லா தற்போது eMudhra வெளியிட்ட சான்றிதழ்களை தடை செய்துள்ளது.

eMudhra-வின் டிஜிட்டல் சான்றிதழ் என்றால் என்ன..?
இணையத்தில் பல கோடிக்கணக்கான இணைய தளங்கள் உள்ளது, இத்தளங்கள் உண்மையிலேயே பாதுகாப்பானவையா, உண்மையிலேயே ஒரு இணையத்தளம் அந்த நிறுவனத்தின் தளமா அல்லது போலியாக உருவாக்கப்பட்டு மக்களை ஏமாற்றுபவையாக என்பதை உறுதி செய்கிறது இந்த டிஜிட்டல் சான்றிதழ். கிட்டத்தட்ட மனிதர்களுக்கு எப்படி ID கார்டு செயல்படுகிறதோ அதேபோல் இணையத்திற்கான ஐடி கார்டு இது.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமாயின் ஒவ்வொரு இணைய தள முகவரிக்கு முன்பு இருக்கும் HTTPS-ல் S என்பது பாதுகாப்பை உணர்த்துகிறது. இது இத்தளம் பாதுகாப்பானவை என்பதை உணர்த்துகிறது, இந்த பாதுகாப்பை பெற வேண்டுமாயின் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட Certifying Authority (CA) மூலம் டிஜிட்டல் சான்றிதழ் பெற வேண்டும், அப்படி eMudhra நிறுவனம் இணைய தளத்திற்கு DSC, TLS/SSL சான்றிதழ்களை வழங்குகிறது.
அப்படி eMudhra கடந்த ஆண்டு கொடுத்த 8 டிஜிட்டல் சான்றிதழ்களின் secret key 4, 56, 66, 115, 155, 156, 230 and 237 என மிகவும் எளிதாக உடைக்க கூடியதாக இருந்துள்ளது. பொதுவாக இந்த secret key 1 என்ற எண்ணில் துவங்கி 115 பூஜ்ஜியங்களில் இருக்கும் அதாவது 116 இலக்கம் கொண்டதாக இருக்கும்.
காரணம் இந்த டிஜிட்டல் சான்றிதழ்களை யாரும் சைபர் அட்டாக் செய்ய கூடாது என்பதற்காக, ஆனால் eMudhra சில நிமிடங்களில் சைபர் அட்டாக் செய்யக்கூடிய வகையில் 1, 3 இலக்கத்தில் பாஸ்வோர்டு கொடுத்துள்ளது.
eMudhra கொடுத்த இந்த 8 டிஜிட்டல் சான்றிதழ்களை 6 இணையத்திற்கும், 2 சாப்ட்வேர்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக இந்த டிஜிட்டல் சான்றிதழ்கள் ஒரு டிரேடிங் சாப்ட்வேர்-க்கோ அல்லது வங்கி இணையத்தளத்திற்கோ கொடுத்திருந்தால்..?
இது தொடர்பான புகார்கள் வந்த உடன் eMudhra உடனடியாக 8 டிஜிட்டல் சான்றிதழ்களையும் திரும்ப பெற்றுள்ளது, Cloudflare போன்ற CDN தளமும் தேவையான முன்னெச்சரிக்கைகளையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் eMudhra கொடுத்த 60 மில்லியன் டிஜிட்டல் சான்றிதழ்கள் தற்போது சரி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காகவும், சிறப்புக் குழு அமைத்துள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது. இதேபோல் eMudhra நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டு உள்ள பிரச்சனை சர்வதேச வர்த்தகத்தை சார்ந்தது, இந்திய இணையதளங்களுக்கு பாதிப்பு குறைவு என்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் சமூக வலைதளத்தில் இப்பிரச்சனை குறித்து தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் கிளப்பி வருவதாகவும் மத்திய ஐடி அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

