இலங்கையில் நிதித் தொழில்நுட்பச் சேவைகள் வேகமாக விரிவடைந்து வருவதால் இணையவழித் தாக்குதல்கள், நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டு உள்ளிட்ட புதிய ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை நிதித் தொழில்நுட்ப விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பங்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
நிதித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நிதி உறுதித்தன்மையை உறுதிப்படுத்தும் வலுவான ஒழுங்குமுறைகள் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தொழில்நுட்பச் சேவை வழங்குநர்கள் மீதான அதிகரித்த சார்பு, இணையவழிப் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதில் ஏற்படும் சவால்கள் மற்றும் டிஜிட்டல் சொத்துக்களின் விலை ஏற்ற இறக்கங்கள் ஆகியவையும் நிதித்துறைக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, டிஜிட்டல் கொடுப்பனவுகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் இணைய வங்கிச் சேவைகள் நாட்டின் நிதிப் பரிவர்த்தனைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய நிதித் தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதுடன் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான கண்காணிப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றையும் வலுப்படுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக தகுதியான புதிய நிதித் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பாதுகாப்பான முறையில் பரிசோதிப்பதற்கு மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் FinTech Regulatory Sandbox திட்டம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

