ஆர்கானிக் பால் பண்ணை.. ஐடி வேலைக்கு நிகரான வருமானம்! மாதம் 1.5 லட்சம் சம்பாதிக்கும் 42 வயது நபர்!
ஒரு IT நிறுவனத்தில் தொடர்ந்து 42 வயது வரை பணிபுரிந்திருந்தால் அவர்களுடைய சம்பளம் எப்படி இருக்கும்? கண்டிப்பாக லட்சங்களில் தான் இருக்கும். இப்படி சீனியர்களாக இருக்கும் சிலர் அதன் பின்பும் சம்பள உயர்வு இருக்கிறதா என்பதை எல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் தன்னுடைய 42-வது வயதில் லட்சங்களில் வருமானம் தந்த ஐடி வேலையை உதறி தள்ளிவிட்டு சொந்தமாக பால் பண்ணை தொடங்கி அதற்கு இணையாக சம்பாதித்து வருகிறார் ஒரு நபர்.
அவருடைய தொழில் முனைவோர் ஆர்வத்தை விகாஸ் ஆல்வேஸ் என்ற எக்ஸ் பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பால் பண்ணை தொடங்கிய நபர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் B.Tech பட்டம் பெற்ற பட்டதாரி. இவர் தொடர்ந்து 42 வயது வரை IT துறையில் பணிபுரிந்தவர். தற்போதைய சூழலில் ஐடி துறையில் நடக்கும் பணி நீக்கங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை.

அடுத்தடுத்து IT துறையில் என்ன பிரச்சனை நடக்குமோ என்ற பயத்திலேயே பலர் பணிக்கு சென்று வீடு திரும்புகின்றனர். மேலும் அவர் பணிந்து புரிந்து வந்த நிறுவனத்திலும் ப்ராஜெக்ட்கள் குறையத் தொடங்கியது.
யார் வேண்டுமானாலும் எப்போதும் வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற மன அழுத்தமே ஊழியர்களை ஒரு புறம் வாட்டி வதைக்கிறது. இப்படி பதற்றமான சூழலுக்கு மத்தியில் சொந்தமாக தொழில் தொடங்கினால் தான் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்று எண்ணிய அந்த நபர் துணிச்சலாக தன் வேலையை கைவிட்டார்.
மேலும் அந்த நபருக்கு எந்த ஒரு கடனும் இல்லை. ஈஎம்ஐ இல்லாத காரணமும் அவரை இந்த முடிவு எடுக்க வைத்தது. கடன் இல்லை என்றால் தாராளமாக புதிய தொழிலுக்கு முதலீடு செய்ய முடியும். அப்படித்தான் அந்த நபரும் இயற்கை பால் பண்ணை தொடங்க முடிவு செய்தார்.
அவர் தொடங்கிய பால் பண்ணையில் தற்போது பசு நெய், தயிர், பன்னீர் மற்றும் இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவர் IT துறையில் பணிபுரிந்த போது அவருடைய சிடிசி ரூ.18 லட்சம். ஒவ்வொரு மாதமும் ரூ. 1.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
அதேபோல் அவர் தொடங்கிய பால் பண்ணையில் இருந்தும் மாதத்திற்கு ரூ. 3.5 லட்சம் வரை வருமானம் வருகிறது. இதில் செலவுகளை எல்லாம் கழித்துக் கொண்டால் மாதத்திற்கு ரூ.1.5 லட்சம் லாபம் கிடைக்கிறது. கிட்டதட்ட ஐடி துறைக்கு நிகரான வருமானத்தை வீட்டில் இருந்தே பார்த்து வருகிறார்.
இந்த பதிவு பகிரப்பட்டதிலிருந்து பலரும் கமெண்ட் செய்ய தொடங்கினர். அதில் ஒரு பயனர் எந்த வேலையாக இருந்தாலும் ஒரே ஒரு வருமானத்தை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. அதற்கு இவரே ஒரு சிறந்த உதாரணம். அதற்காக எல்லோரும் இவரை போல வேலையை விட்டு விட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேலை இருக்கும்போதே வேறு ஏதாவது ஒரு தொழிலை உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மற்றொரு நபர் 42 வயதான ஒருவர் இது போன்ற சுய தொழிலை தொடங்குவதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அவருடைய உழைப்புக்கு தான் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று கமெண்ட் செய்திருந்தார். தற்போதைய பணி நீக்க சூழலில் முன்கூட்டியே யோசித்து சுய தொழில் தொடங்கிய அந்த நபர் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி தான்!

