Sports
oi-Yogeshwaran Moorthi
அட்லாண்டா: ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அடைந்த தோல்விக்கு பின் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 2 வார்த்தைகளில் எழுதியுள்ள ஒரு பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி இருக்கிறது.
ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி தோல்வி அடைந்து வெளியேறியது. ஸ்பெயின் அணியின் மைக்கில் மரினோ அடித்த கோல் காரணமாக போர்ச்சுகல் அணியின் உலகக்கோப்பை கனவு சுற்றுநூறாக நொறுங்கியது. இதனால் நட்சத்திர வீரர் ரொனால்டோ மைதானத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார்.

கடைசி உலகக்கோப்பை தொடரிலும் போர்ச்சுகல் அணிக்கு உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற கவலையுடன் ரொனால்டோ இருந்தார். போர்ச்சுகல் அணியிடம் வலிமையான மிட் ஃபீல்டர்கள் இருந்தும் சக வீரர்களின் ஒத்துழையாமை காரணமாக எந்த கோலும் அடிக்க முடியவில்லை. அந்த அணியில் ரொனால்டோவின் பேச்சிற்கு கொஞ்சம் கூட மதிப்பும் இருக்கவில்லை.
களத்தில் இதனை கண்கூடாக பார்க்க முடிந்தது. ரொனால்டோ கண்ணீர் சிந்திய போதும் கூட போர்ச்சுகல் அணியின் எந்த வீரரும் அவருடன் நிற்கவில்லை. ஆறுதல் கூறியோ, வாழ்த்து சொல்லியோ கூட ஓய்வறைக்கு அனுப்பவில்லை. இதனால் ரொனால்டோவுக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் அந்தப் போட்டி மறக்க முடியாத ஒன்றாக மாறியது.
இந்தப் போட்டிக்கு பின் ரொனால்டோ பேசுகையில், இதுதான் தனது கடைசி உலகக்கோப்பை போட்டி.. ஆனால் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க இன்னும் சில நாட்களாகும் என்றார். இதனிடையே ரொனால்டோவின் பிராண்ட் காரணமாக அவருக்கு போர்ச்சுகல் அணியில் இடம் கிடைத்தது என்று சில விவாதங்கள் எழுந்தன.
இந்த நிலையில் 41 வயதாகும் ரொனால்டோ உலகக்கோப்பை தொடருக்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 வார்த்தைகளில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். போர்ச்சுகல் அணி வீரர்கள் அனைவரும் மைதானத்தில் ஒன்று கூடி நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரொனால்டோ, “Portugal Forever” என்று பதிவிட்டுள்ளார். இது அவரின் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

