அரசு மருத்துவ காப்பீடு வைத்திருந்தால் ஜாக்பாட்!! ரூ.5 லட்சம் இலவச காப்பீடு ரூ.10 லட்சமாக உயர்கிறது?
இந்தியாவில் ஏழை எளிய குடும்பங்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் , மருத்துவ செலவுகள் ஏழை குடும்பங்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதற்கு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கத்தில் மத்திய அரசு இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டம் என இது அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டை பெற்றவர்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சைகளை பெறலாம். விரைவில் இந்த இலவச காப்பீடு தொகை உயரபோகிறது.

இலவச மருத்துவக் காப்பீட்டு தொகையை 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. நவீன மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சை செலவுகள் தற்போது பெருமளவு உயர்ந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை போன்றவற்றுக்கு தேவைப்படும் செலவுகள், தற்போதைய இலவச காப்பீட்டு தொகையான 5 லட்சம் ரூபாய் என்ற வரம்பை விட அதிகமாக உள்ளன என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால் காப்பீடு இருந்தும், சிகிச்சை செலவுகள் காப்பீட்டு வரம்பை தாண்டிவிடுவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் கைக்காசை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதனை தவிர்க்க காப்பீட்டு தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

காப்பீட்டு தொகை உயர்வுக்கு தேவையான நிதியை திரட்ட, அரசு மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விலையை குறைப்பது, மாநில அரசுகளுடன் இணைந்து நிதியுதவி பெறுவது மற்றும் கூட்டு நிதி முறையைப் பின்பற்றுவது போன்றவற்றை நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும் காப்பீட்டு சிகிச்சைகளுக்கான ஒப்புதலை பெறுவதில் நிலவும் தாமதத்தைத் தவிர்க்க, விண்ணப்பங்களை 6 மணி நேரத்திற்குள் பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும் என்று குழு தெரிவித்துள்ளது. இதற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், தாமதம் செய்யும் மருத்துவமனைகள் மீது அபராதம் விதிக்கவும் யோசனை கூறியுள்ளது.
இந்த காப்பீட்டுத் தொகையை உயர்த்துவதன் மூலம், ஏழை எளிய மக்கள் தரமான மருத்துவ சிகிச்சையை பெறுவதை உறுதி செய்யவும், மருத்துவச் செலவுகளால் ஏற்படும் நிதி சுமையை குறைக்கவும் முடியும் என நாடாளுமன்ற நிலை குழு தெரிவித்துள்ளது.மத்திய அரசு நாடாளுமன்ற குழுவின் இந்த பரிந்துரை ஏற்று காப்பீட்டு தொகையை அதிகப்படுத்தினால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும். இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டால் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு மிகப்பெரிய நிதி பாதுகாப்பு அரணாக அமையும்.

