கோலாலம்பூர், அம்பாங்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது பணமோசடி நடவடிக்கையை காவல்துறை முறியடித்ததோடு 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 14 அன்று தாமான் அம்பாங் உத்தாமாவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் கம் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார். இந்தச் சோதனையில், இரண்டு பெண்கள் உட்பட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மோசடி நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த லாபத்தைக் கையாண்டு வந்ததாக காவல்துறை நம்புகிறது.
ஜனவரி 2026 முதல் இந்தக் கும்பல் செயல்பட்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களில் ஒன்பது பேர், பிலிப்பைன்ஸ், தைவான், ஹாங்காங், இந்தோனேசியா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகளை நிர்வகிக்கும் ‘செயல்பாட்டாளர்களாக’ செயல்பட்டது கண்டறியப்பட்டது. அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளும் டெலிகிராம் தளம் வழியாக நடத்தப்பட்டு, அந்த நிதிகள் கிரிப்டோகரன்சியாக (USDT) மாற்றப்பட்டு, அதன் அசல் உரிமையாளர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
சந்தேக நபர்கள் அனைவரும் 23 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் கூறினார். காவல்துறையினர் 15 கைபேசிகள் மற்றும் நான்கு மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர். குடிநுகழைவுச் சட்டம் 1959/63-இன் கீழ், சந்தேக நபர்கள் மே 1 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.




