ஊழல் புகார் தொடர்பாக, அதானியை பிரதமர் மோடி பாதுகாப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில், பிரதமர் மீதான மரியாதையை ராகுல் குலைப்பதாக பாஜக பதிலடி தந்துள்ளது. இதனிடையே, அமெரிக்க நீதிமன்ற குற்றச்சாட்டுகளால் அதானி குழுமம் ஒரே நாளில் 2 லட்சம் கோடியை பங்கு சந்தையில் இழந்துள்ளது.
அதானி குழுமம் மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு இந்தியாவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அதானி இந்திய சட்டத்தையும் அமெரிக்க சட்டத்தையும் மீறிவிட்டார்” எனக்கூறினார். மேலும் அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள பாஜக எம்.பி. சம்பித் பத்ரா, “மோடி மீதான மரியாதையை ராகுல் குலைக்கிறார்” என்றார். மேலும், அமெரிக்க நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய மாநிலங்கள் அனைத்தும் பாஜக ஆளாதவைகளே என்றார்.
இதையும் படிக்க:
அமெரிக்க நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் முதல் பங்குகள் சரிவு வரை! அதானிக்கு விழுந்த அடி
இதனிடையே அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு மின்சாரத்துறைக்கும் எவ்வித வணிக தொடர்பும் இல்லை என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குசந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் 23 விழுக்காடு வரை சரிந்தன. அதிகபட்சமாக அதானி என்டர்பிரைஸ் பங்குகள் 22.61% வீழ்ச்சியடைந்தன. மொத்தத்தில் அதானி குழுமத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதேபோல அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசிக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது.
இந்நிலையில் அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. “குற்றம் நிரூபணம் ஆகும் வரை தாங்கள் நிரபராதிகள்” என்று அமெரிக்க நீதித்துறை சுட்டிக்காட்டி இருப்பதாக, அதானி குழுமம் தனது விளக்க அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளது.
தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று அதானி குழுமம் உறுதி அளித்துள்ளது.
வெளிப்படைத்தன்மையுடன், விதிகளை எப்போதும் பின்பற்றி செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அதானி குழுமம், தாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்று அனைத்து பங்குதாரர்கள், மற்றும் ஊழியர்களுக்கு உறுதி அளிப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
