Last Updated:
14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஒரு மாத காலத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெறும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தான் தலைநகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே, இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா- ஈரான் இடையே பே்சசுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
பின்னர் போர் நிறுத்தத்தை நீடித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதே நேரத்தில் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஒரு மாத காலத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெறும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம், ஹார்முஸில் நிலவும் பதற்றத்தைக் குறைத்தல், ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மற்றொரு நாட்டுக்கு மாற்றுவது உள்ளிட்ட அம்சங்களை அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்களை ஈரான் இணைத்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக பிரச்னை மேலும் சிக்கலாக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
May 10, 2026 10:07 PM IST
அமெரிக்கா – ஈரான் பிரச்னையில் அடுத்த திருப்பம்.. புதிய கட்டுப்பாடுகளால் நிலைமை சிக்கலாகும் அபாயம்…

