அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கின் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில், டொனால்ட் டிரம்பின் ‘கோல்டு கார்டு’ அல்லது ‘கோல்டு விசா’ திட்டம் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கார்டுக்கு $5 மில்லியன் செலுத்தி அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை மற்றும் விருப்ப குடியுரிமையை பெற முடியும். இந்த கோல்டு கார்டை பெறுவதற்காக மக்கள் வரிசையில் நிற்பதால், ஒரே நாளில் 1,000 கோல்டு கார்டுகள் விற்கப்பட்டதாக ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் சுமார் இரண்டு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படும் நிலையில், அதற்கான மென்பொருளை எலான் மஸ்க் உருவாக்கி வருவதாகவும், சுமார் இரண்டு வாரங்களில் அவை அறிமுகப்படுத்தப்படும் என்று ‘ஆல்-இன் பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார். மேலும், நேற்று தான் ஆயிரம் கார்டுகளை விற்றதாகவும் அவர் அதில் கூறியிருக்கிறார்.
பின்னர் இதுகுறித்து விளக்கிய அவர் கூறியதாவது, “நீங்கள் ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்தால், நீங்கள் குளோபல் டேக்ஸ் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே, குளோபல் டேக்ஸ் செலுத்த வேண்டியிருப்பதால் வெளிநாட்டினர் நிச்சயமாக அமெரிக்காவிற்கு வரமாட்டார்கள். எனவே, உங்களிடம் கிரீன் கார்டு, இப்போது கோல்டு கார்டு இருந்தால், நீங்கள் (வரி செலுத்தாமல்) அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை கொண்டவர்களாக இருப்பீர்கள். நீங்கள் ஒரு குடிமகனாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அது ஒருவரது தனிப்பட்ட உரிமை, ஆனால் இங்கு குடியுரிமை இல்லாமல் இருக்க யாரும் விரும்பமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறும்பட்சத்தில், ஒருவர் குளோபல் டேக்ஸ் செலுத்துவதைத் தவிர்க்கலாம்” என்று கூறினார்.
5 மில்லியன் டாலர்கள் செலுத்தி கோல்டு கார்டு பெறுபவர்களுக்கு, அமெரிக்காவில் (காலவரையின்றி, எந்த நேரத்திலும்) இருக்க உரிமை உண்டு. அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்கள். அவர்கள் தீய அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால், அமெரிக்கா எந்த நேரத்திலும் அவர்களது குடியுரிமையை ரத்து செய்யலாம்.
உதாரணமாக, நான் ஒரு அமெரிக்கராக இல்லாமல், உலகின் வேறு ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தால், நான் 6 கோல்டு கார்டுகளை வாங்குவேன், ஒன்று எனக்கு, ஒன்று என் மனைவிக்கு, மற்றவை என் நான்கு குழந்தைகளுக்கு, ஏனென்றால் ஏதேனும் பேரழிவோ அல்லது துயராக சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், விமான நிலையத்திற்குச் சென்று நான் நேராக அமெரிக்காவிற்கு பறக்க முடியும்.
இந்த விருப்பத்தையும், உரிமையையும் நான் பெற விரும்புகிறேன். நான் அங்கு என் வாழ்க்கையை மீண்டும் தொடங்கலாம், ஒரு தொழிலைச் செய்யலாம் அல்லது வேறு எதையும் செய்ய எனக்கு உரிமை உண்டு. மேலும், நான் வேறு ஒரு நாட்டில் சம்பாதித்த பணத்திற்கு அங்கு வரி விதிக்கப்படாது. அங்கு வசிக்கும்போது, அமெரிக்காவில் நான் சம்பாதிப்பதற்கு மட்டுமே வரி விதிக்கப்படும், அதுதான் இந்த யோசனை என்று அவர் மேலும் விளக்கினார்.
மேலும், அவர் டிரம்ப் நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின்படி, உலகில் 37 மில்லியன் மக்கள் கோல்டு கார்டை வாங்கும் திறன் கொண்டவர்கள் என்று கூறினார். ஜனாதிபதி டிரம்ப் ஒரு மில்லியன் அளவிலான கார்டுகளை விற்க முடியும் என்று நம்புவதாகக் கூறினார். இவ்வாறாக, கோல்டு கார்டு வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் நிதி, அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறை அல்லது தேசியக் கடனைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தை அறிவிக்கும் போது, வழங்கப்படும் கோல்டு கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஆண்டு வரம்பு என்று எதுவும் இருக்காது என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஒரே நாளில் 1,000 கார்டுகள் என்ற அளவில் விற்கப்படும், அப்படியெனில், 24 மணி நேரத்தில் இந்த தொகை $5 பில்லியன் என ஒரு நம்பிக்கைக்குரிய தொடக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறலாம்.
March 26, 2025 8:35 AM IST

