சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவை மீட்க இந்தியப் பிரதமர் மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைத் தமிழ் இளைஞரான அனோஜன் சிவராசாவின் வழக்கில் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சவூதி முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர் என்பதையும், இலங்கையின் உயரிய சிவில் விருதான ‘ஸ்ரீ லங்கா ரத்னா’ கௌரவத்தைப் பெற்ற இந்நாட்டின் நீண்டகால நண்பர் என்பதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
எனவே, மரண தண்டனையை எதிர்கொண்டு நிர்க்கதியாகியுள்ள அனோஜன் சிவராசாவின் அவல நிலையை இந்தியப் பிரதமரின் அவசர கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறும், முடிக்குரிய இளவரசர் சல்மானுடன் பேசி மனிதாபிமான அடிப்படையில் தீர்வைப் பெற்றுத்தர மோடியின் தனிப்பட்ட தலையீட்டைக் கோருமாறும் அவர் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராசா, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் கருத்து இஸ்லாமிய மார்க்கத்தையும் இறைத்தூதர் முஹம்மது நபியையும் அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இலங்கையிலுள்ள மத சமூகங்களுக்கு இடையில் இணையவழியில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போதே இந்தக் கருத்து பதிவிடப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கினை விசாரித்த சவூதி நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி அனோஜன் சிவராசாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தண்டனையைக் குறைக்குமாறு கோரி இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் அவரது சட்டத்தரணியால் மேன்முறையீடு செய்யப்பட்டது.
எனினும், அந்த மேன்முறையீட்டு விசாரணையின் முடிவில் தண்டனைக் காலம் குறைக்கப்படுவதற்குப் பதிலாக, அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரைக் காப்பாற்றும் நோக்கில் இலங்கை அரசு தூதரக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே, மனோ கணேசன் இந்த ராஜதந்திர தலையீட்டுக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

