Last Updated:
நாட்டில் ஜனநாயகத்தைக் காக்கவும், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமைகளை முழு நேர்மையுடன் நிறைவேற்றுவதிலும் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது – இந்திய தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகின. தேர்தல் ஆணையர்கள் மூவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அது சாத்தியமாகாத நிலையில், பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவுகள் அமைய வேண்டும்.
ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை அதிகாரப்பூர்வமாகத் தங்களது ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்ததாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.
இந்த புகார்கள் மற்றும் தகவல்கள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளதது. அதில், ” தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசமைப்பின் 324-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றியே ஆணையம் செயல்பட்டு வருகிறது.
ஏதேனும் ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு முன்பாக, பல்வேறு கருத்துகள் பரிசீலிக்கப்படுவதும், கருத்து வேறுபாடுகள் எழுவதும் இயல்பான ஒன்றுதான். தேர்தல் ஆணையர்கள் மட்டுமின்றி, ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரியும் தங்களது பரிந்துரைகளைக் கூறுவதற்கு அதிகாரம் உண்டு.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி உட்பட 40 புதிய திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் அனைத்தும் ஒருமனதான முடிவுகளின்படியே எடுக்கப்பட்டவை ஆகும். நாட்டில் ஜனநாயகத்தைக் காக்கவும், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமைகளை முழு நேர்மையுடன் நிறைவேற்றுவதிலும் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


