Last Updated:
மகாராஷ்டிரா பரத்வாடா இளைஞர் முகமது அயாஸ் சமூக வலைதளத்தில் 180 சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு, 7 நாள் போலீஸ் காவல், எஸ்ஐடி விசாரணை கோரிக்கை.
மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் காதல் வலை வீசி 180 சிறுமிகளை நம்பவைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பரத்வாடா நகரைச் சேர்ந்தவர் முகமது அயாஸ் என்கிற தன்வீர், 19 வயதான இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்களை பார்த்து லைக் போடும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு காதல் தூது விட்டுள்ளார். வெளித் தோற்றத்தை பார்த்து இளைஞரின் குரூர முகம் அறியாமல் அப்பாவி சிறுமிகள் பலரும் லவ் புரபோஸலை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தனது மாய வலையில் விழுந்த சிறுமிகளை மும்பை, புனே போன்ற பெருநகங்களுக்கு உல்லாச சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். நம்பிச் சென்ற சிறுமிகளிடம் நயவஞ்சமாக பேசி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். அதிலும், சிலரிடம் அவர்களுக்கு தெரியாமலயே ரகசியமாக அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்துள்ளார். இதுபோன்று பல்வேறு சிறுமிகளிடம் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது செல்போனில் பதுக்கி வைத்துள்ளார்.
மேலும், அந்தரங்க வீடியோக்களை காட்டி அப்பாவி சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிலரை பாலியல் தொழிலில் தள்ளியதாகவும், சிலரை மதம் மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது எதிர்காலம் கருதி புகார் கொடுக்காமல் மவுனம் காத்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அனில் போண்டே போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். விசாரணையில் முகமது அயாஸ் 180 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரது செல்போனில் 350-க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முகமது அயாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இளைஞரின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதை ஆய்வு செய்து வருகின்றனர். அதில், சிறுமிகளின் அந்தரங்க வீடியோக்களை தனது நண்பர்களிடம் ஷேர் செய்தாரா? அல்லது குரூர எண்ணம் கொண்ட கும்பலுக்கு அனுப்பினாரா என்று விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் சிறுமிகளை நம்பவைத்து சீரழித்த கொடூர செயலில் முகமது அயாஸ் தனியாளாக ஈடுபட்டாரா அல்லது இதற்குப் பின்னால் வேறு யாரேனும் உள்ளனரா எனவும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேவேளையில், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் இணையதளத்தில் பகிரப்பட்ட வீடியோக்களை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தொன்பது வயது இளைஞர் ஒருவர், காதல் வலை வீசி 180 சிறுமிகளை நம்பவைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்ததான் பார்க்கவேண்டும்.
Apr 15, 2026 10:21 PM IST


