
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)க்கான மோசடிகள் மற்றும் போலி சம்மன்கள் அதிகரித்து வருவதாக நிதி அமைச்சகம், வரி செலுத்துவோரை எச்சரித்துள்ளது. இது போன்ற சம்மன்களை ஒருவர் பெறும் பட்சத்தில், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆவணங்களை சரிபார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் (டிஜிஜிஐ), மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (சிபிஐசி) விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படாத வரி செலுத்துவோருக்கு போலி சம்மன்கள் அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சகம், அத்தகைய ஆவணங்களை சிபிஐசி (CBIC) இணையதளத்தில் எளிதாக சரிபார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
போலி சம்மன்கள்
மோசடி நோக்கத்துடன் சில நபர்கள் வரி செலுத்துவோருக்கு, போலி சம்மன்களை உருவாக்கி அனுப்புவதை ஜிஎஸ்டி அதிகாரிகள் சமீபத்தில் கண்டுபிடித்ததாக மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஜிஎஸ்டியின் கீழ் ஏதேனும் அறிவிப்பு மற்றும் சம்மன்கள் வெளியிடப்படுவதை சரிபார்க்க, சிபிஐசி-யின் இணையதளத்தில் உள்ள ஆவண அடையாள எண்ணை (DIN) சரிபார்க்குமாறு வரி செலுத்துவோரை நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுபோன்ற போலி சம்மன்களில், ஜிஎஸ்டி துறையின் லோகோ மற்றும் ஆவண அடையாள எண் (DIN) பயன்படுத்தப்படுவதால், இந்த போலி சம்மன்கள் பார்ப்பதற்கு அசல் போன்ற தோற்றத்திலேயே இருக்கின்றன. இருப்பினும், உங்களுக்கு அனுப்பப்படும் சம்மன் போலியாக இருக்கும்பட்சத்தில், அதில் இருக்கும் ஆவண அடையாள எண்ணும் போலியானதாகவே இருக்கும். அவை மோசடி செய்பவர்களால், உங்களை ஏமாற்றுவதற்காக அனுப்பப்படுகின்றன என்று அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக 2024 பிப்ரவரியில், ஜிஎஸ்டி விதிமீறல்களுக்கான போலி மற்றும் மோசடி சம்மன்கள் குறித்து வரி செலுத்துவோரை எச்சரித்து இதேபோன்ற ஒரு அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க, போலி மற்றும் மோசடி சம்மன்களை அனுப்புபவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, டிஜிஜிஐ (DGGI) தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசு வலைத்தளத்தில் சரிபார்ப்பு
சிபிஐசி (CBIC) -இன் வலைத்தளமான https://esanchar.cbic.gov.in/DIN/DIN Search இல் உள்ள ‘VERIFY CBIC-DIN’ பக்கத்தை பயன்படுத்தி சிபிஐசி (CBIC)-இன் எந்தவொரு அதிகாரியும் வழங்கிய, சம்மன் உட்பட எந்தவொரு தகவல் தொடர்பு குறித்த உண்மைத் தன்மையையும் சரிபார்க்குமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஆவண அடையாள எண் (DIN) -ஐ சரிபார்த்து, எந்தவொரு தனிநபரோ அல்லது வரி செலுத்துவோரோ போலியான சம்மன்/கடிதம்/அறிவிப்பை பெற்றதை உறுதிப்படுத்தும் பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. “இது, பொதுமக்களை ஏமாற்ற போலி சம்மன்/கடிதம்/அறிவிப்பை அனுப்பி மோசடி செய்பவர்கள் மீது சட்ட அமலாக்க நடவடிக்கை எடுக்க தகுதிவாய்ந்த டிஜிஜிஐ/சிஜஎஸ்டி (DGGI/CGST) அமைப்பை அனுமதிக்கும்” என்று கூறியுள்ளது.
இதையும் படிக்க: போஸ்ட் ஆஃபிஸ் FD vs RD: 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் முதலீட்டில் எது அதிக வருமானத்தை தரும்?
ஆவண அடையாள எண்
DIN என்பது ஆவண அடையாள எண்ணாகும். இது கணினியால் உருவாக்கப்பட்ட தனித்துவமான அடையாள எண்ணாகும். இது எந்தவொரு வரி செலுத்துபவருக்கும் வரி அதிகாரிகளால் வழங்கப்படும் ஒவ்வொரு தகவல் தொடர்பிலும் (கடிதம் / அறிவிப்பு / உத்தரவு / வேறு ஏதேனும் கடிதம்) முறையாக மேற்கோள் காட்டப்பட வேண்டும்.
சிபிஐசி (CBIC) அதன் அதிகாரிகள் வரி செலுத்துவோருக்கு அனுப்பும் அனைத்து தகவல் தொடர்புகளுக்கும் டிஜிட்டல் முறையை உருவாக்க நவம்பர் 2019இல் ஆவண அடையாள எண் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. சர்ச் ஆத்தரைசேஷன், சம்மன்கள், கைது மெமோ, ஆய்வு அறிவிப்புகள் மற்றும் எந்தவொரு விசாரணையின்போதும், வழங்கப்படும் கடிதங்களுக்கு ஆவண அடையாள எண் (DIN) பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிக்க: எஸ்பிஐ vs போஸ்ட் ஆபிஸ்… 5 ஆண்டுகள் FD-க்கு இரண்டில் எது அதிக லாபத்தை வழங்குகிறது தெரியுமா?
ஜிஎஸ்டி-ஐப் போலவே, அக்டோபர் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு வருமான வரித்துறையால் வெளியிடப்படும் ஒவ்வொரு தகவல் தொடர்பும், ஒரு தனித்துவமான ஆவண அடையாள எண்ணைக் கொண்டுள்ளது. வருமான வரித் துறையின் பெயரில் எந்தவொரு தகவலையும் அல்லது கடிதத்தின் உண்மைத் தன்மையையும் சரிபார்க்குமாறு வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை முன்னதாக அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
January 28, 2025 1:26 PM IST

