அதானி குழுமம் பொய் சொல்கிறது: ஆதாரத்துடன் புதிய குண்டை தூக்கி போட்ட மஹுவா மொய்த்ரா..!!
இந்தியாவில் மிகப்பெரிய தொழில் குழுமமாக செயல்படும் அதானி குழுமம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக அரசு அதானி குழுமத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை அடிக்கடி முன் வைக்கும்.
அண்மையில் தான் அதானி குழுமம் விமான போக்குவரத்து தொழிலில் நுழைய போவதாக தகவல் வெளியானது. பின்னர் அந்த தகவல் மறுக்கப்பட்டது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா புதிய ஆவணம் ஒன்றை வெளியிட்டு அதானி குழுமம் பொய் கூறுகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மஹுவா மொய்த்ரா, ஒரு ஆவணத்தையும் அதில் இணைத்துள்ளார்.

கடந்த ஜூலை 24 அன்று, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், தாங்கள் விமான நிறுவனத்தை தொடங்கும் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என மும்பை பங்கு சந்தைக்கும் , தேசிய பங்கு சந்தைக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. ஆனால், அதற்கு மாறாக ஜூன் 4 ஆம் தேதியிட்ட அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம் விமான சேவையில் ஈடுபட தங்களுக்கு அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது. அதானி குழுமம் பங்குச் சந்தைகளிடம் பொய் கூறுகிறது என அவர் சாடியுள்ளார்.
மஹுவா மொய்த்ரா பகிர்ந்துள்ள அந்த ஆவணம் ஜூன் 4 ஆம் தேதியிட்ட கடிதம், அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தால் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு எழுதப்பட்டதாக உள்ளது. அதில் அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனம் விமான துறையில் தனது பங்கை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு விமான நிலைய தனியார்மயமாக்கல் ஒப்பந்த விதிமுறைகளின்படி, அதானி குழும நிறுவனங்கள் விமான போக்குவரத்து சேவைகளை தொடங்க சில தடைகள் உள்ளன. அந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு கோரியே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
See Letter of June 4th to AAI asking for waiver of 2006 privatisation agreement for airport operator be allowed to own and invest in airlines pic.twitter.com/pIv8lzGQs3
— Mahua Moitra (@MahuaMoitra) August 9, 2026 “>
குறிப்பாக அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் அல்லது அதன் துணை நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு விமான நிறுவனத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிறுவ, வாங்க, சொந்தமாக வைத்திருக்க அல்லது கட்டுப்படுத்த அனுமதிக்க வேண்டும். அதானி குழுமத்தின் கீழ் இயங்கும் எந்தவொரு விமான நிலைய நிர்வாகமும், விமான நிறுவனத்தில் பங்கு வைத்திருக்க அனுமதி வழங்க வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
விமான நிலையங்களை இயக்குபவர்களையும் விமான சேவையில் ஈடுபட அனுமதித்தால் இந்த துறையில் ஆரோக்கியமான போட்டி அதிகரிக்கும் மற்றும் சந்தையில் ஒருசில நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும் போக்கு குறையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை இணைப்பதன் மூலம், பிராந்திய இணைப்பை மேம்படுத்த முடியும். இது மத்திய அரசின் உதான் திட்டத்தின் நோக்கங்களுக்கும் உறுதுணையாக இருக்கும் என அதானி குழுமம் அதில் தெரிவித்துள்ளது.
மஹுவா மொய்த்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. ஆனால் முன்னதாக அதானி குழுமம் ஏர்லைன் சேவையில் ஈடுபட இருப்பதாக வெளியான தகவலுக்கு அப்போதே அதனை மறுத்து அதானி குழுமம் விளக்கம் தந்தது. விமான சேவை வழங்கும் திட்டங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என பங்குச்சந்தைகளிடம் திட்டவட்டமாக மறுத்து பதில் அளித்திருந்தது.

