Last Updated:
அசாமில் உள்ள 126 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 64 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பின்பு வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது
மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில், அசாமில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம், கேரளா, அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் நான்காம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், மூன்று மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 294 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், Matrize, PMARQ மற்றும் சாணக்யா ஸ்டரேட்டஜிஸ் ஆகிய நிறுவனங்கள் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளன. பாஜக 146 முதல் 161 இடங்கள் வரை பெறக்கூடும் என இவை தெரிவிக்கின்றன.
இதற்கு நேர்மாறாக, பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 177 முதல் 187 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணித்துள்ளது. JVC நிறுவனத்தின் கணிப்புப்படி, பாஜக 138-159 இடங்களும், திரிணாமுல் காங்கிரஸ் 131-152 இடங்களுக்கு இடையே மிக நெருக்கமான போட்டி நிலவுவதால், அங்கு இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. பெரும்பாலான கணிப்புகளில் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் ஒற்றை இலக்க இடங்களையே பெறும் அல்லது ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாது என கணித்துள்ளன.
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. VOTE VIBE கருத்துக்கணிப்பின்படி, ஆளும் இடதுசாரிகள் கூட்டணி 68 தொகுதிகள் வரையும், காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகள் வரையும், பாஜக 4 தொகுதிகள் வரையும் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி 42.6 சதவீதம் வாக்குகளைப் பெற்று ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகள் 39.5 சதவீதம் வாக்குகளும், பாஜக 14.3 சதவீதம் வாக்குகளும் பெறும் என VOTE VIBE கணித்துள்ளது. அதேநேரம், கேரளத்தின் முதலமைச்சராக யார் வர விருப்பம் என்ற கேள்விக்கு அதிகபட்சமாக 31.8 சதவீதம் பேர் பினராயி விஜயனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். P-MARQ, MATRIZE, AXIS MY INDIA, JVC ஆகிய நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கூட்டணி 70 முதல் 90 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் உள்ள 126 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 64 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பின்பு வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. Axis My India, பாஜக கூட்டணிக்கு 88 முதல் 100 இடங்கள் வரையிலும், JVC நிறுவனம், பாஜக கூட்டணி 88 முதல் 101 இடங்களைக் கைப்பற்றி வலுவான முன்னிலை பெறும் என்று கணித்துள்ளன.
PMARQ, சாணக்யா ஸ்டரேட்டஜிஸ் நிறுவனங்கள், பாஜக கூட்டணி 80 முதல் 100 இடங்களைப் பெற்றுப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என கணித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 22 முதல் 40 இடங்களுக்குள் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. AIUDF கட்சி மற்றும் இதர வேட்பாளர்கள் மிகக் குறைந்த அளவிலேயே வெற்றி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


