ராமேஸ்வரி ராஜா
கூச்சிங்:
ஊடகத் துறையில் 45 ஆண்டுகாலமாக பயணித்துவரும் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த முருகையா மெய்யப்பன் பிரதமர் டத்தோஸ்ரீ அனுவார் இப்ராஹிம் முன்னிலையில் ‘சரவாக் பிரிமியர் சிறப்பு பாராட்டு விருது’ பெற்றார்.
‘ஹவானா 2024’ எனும் தேசிய ஊடகவியலாளர்கள் தினம் கடந்த மே, 24 தொடங்கி 27 வரை நான்கு நாட்களுக்கு கூச்சிங் சரவாக்கில் நடைபெற்றது. அதன் இறுதி நாளின் உச்ச மாநாட்டை திறந்து வைத்த பிரதமர் அனுவார் இப்ராஹிம் முன்னிலையில் ஊடகத்தில் நீண்ட காலம் பயணித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் ஒருவராக முருகையா மெய்யப்பன் சரவாக் பிரிமியர் டத்தோ பாதிங்கி டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓப்பெங்’கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.
1979 ஆம் ஆண்டு ‘தி சரவாக் ஹெரால்ட்’ எனும் நாளிதழில் குற்றம், நீதிமன்றம், விளையாட்டு துறைகளைச் சார்ந்து எழுத்தாளராக பயணத்தைத் துவங்கிய இவர், ‘நியூ சரவாக் ட்ரிப்யூன்’ ஊடகத்தின்
இணை ஆசிரியர், கட்டுரையாளராக இன்றும் ஊடகத்தில் தனக்கென ஒரு இடத்தை வகுத்து வருவதாக குறிப்பிட்டார்.
ஊடகத்துறையில் எடிட்டிங், செய்தி தயாரிப்பு,
பத்திகளை எழுதுதல், பேய் தொடர், மக்கள் தொடர்பு, விளம்பரம் வெளியிடுவது, நெருக்கடி மேலாண்மை, பயிற்சியாளரைப் பயிற்றுவித்தல் போன்ற பிரிவுகளில் பழுத்த அனுபவத்தை தாம் கொண்டிருப்பதாகவும் சிபு, சரவாக்கில் பிறந்து வளர்ந்தவருமான முருகையா மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்.