கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளநீர் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இளநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வரும் வாரங்களில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இளநீருக்கு பெயர்போன பொள்ளாச்சியில் அறுவடை செய்யப்படும் செவ்விளநீர் மற்றும் பச்சை நிற இளநீர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும்நிலையில், கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க இளநீர் உள்ளிட்டவற்றை மக்கள் நாடி செல்கின்றனர். இதனால் இளநீருக்கு மவுசு அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பால், பொள்ளாச்சியிலிருந்து இளநீர் அனுப்பிவைக்கும் பணி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் இளநீர் அனுப்பிவைக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதால், நேரடி விலையாக ஒரு இளநீர் 33 ரூபாய் வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், தற்போது போதிய மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பல இடங்களில் தென்னைகள் வாடி வதங்கியதுடன், இளநீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இளநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடும் வெப்பத்தால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததே உற்பத்தி குறைவுக்கு காரணம் என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தண்ணீரை விலைக்கு வாங்கி, மீதமுள்ள மரங்களை காப்பாற்றி வருவதாக தென்னை விவசாயிகள் கூறுகின்றனர்.
பருவமழை பொய்த்து போனதால், நாளடைவில் தென்னை மரங்கள் இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோடை வெயிலில் நீர்ச்சத்தை அதிகரிக்க மனிதர்கள் இளநீரை தேடி செல்வதுண்டு. ஆனால், தென்னை மரங்களே இங்கு தண்ணீரின்றி வாடி வதங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் – சக்திவேல் (பொள்ளாச்சி)
.