கோவை/திருப்பூர்: வீடுகளுக்கு சோலார் பேனல் திட்டத்தில் (சூரிய மின்சக்தி திட்டம்) இணைய விருப்பம் உள்ளவர்கள் அஞ்சலகத்தில் பதிவு செய்ய அஞ்சல் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கோபாலன், திருப்பூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அ.விஜயதனசேகர் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீடுகளில் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து மக்கள் பயன்படுத்த முடியும் என்ற நிலையில், அவர்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற திட்டத்தை மத்திய அரசுஅறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் இணைவோர் தங்களது வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதுடன், உபரி மின்சாரத்தை மின் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை ஒவ்வொரு குடும்பத்தினரும் மிச்சப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.
இத்திட்டம் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் உதவும். இத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ள பொதுமக்களின் விவரங்களை சேகரிக்கும் பணியைமேற்கொள்ள அஞ்சல் துறையில்பணிபுரியும் அனைத்து அஞ்சல்காரர்களையும் மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது. எனவே, அனைவரும் இந்த வாய்ப்பை பெற அருகில் உள்ள அஞ்சலகத்தை தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.