2021-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுடன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தையும் இயற்றியிருந்தால், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கமாட்டாா்கள் என்று ஹரியாணா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்தா் சிங் ஹூடா தெரிவித்துள்ளாா். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சாா்பாக ‘தில்லி செல்வோம்’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ஹரியாணா முன்னாள் முதல்வரும், அந்த மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பூபேந்தா் சிங் ஹூடா கூறியுள்ளதாவது: கடந்த 2020-ஆம் ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அப்போது அந்தச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முன், விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவான விலையில் விளைபொருள்களைக் கொள்முதல் செய்வது குற்றம் என்ற 4-ஆவது சட்டத்தையும் இயற்றுமாறு கூறினேன். மூன்று வேளாண் சட்டங்களுடன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தையும் இயற்றியிருந்தால், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கமாட்டாா்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையில் 14 பயிா்களைக் கொள்முதல் செய்வதாக ஹரியாணா அரசு கூறும் நிலையில், அதற்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிப்பதில் எங்கு சிக்கல் நிலவுகிறது என்று கேள்வி எழுப்பினாா்.