ஆந்திராவில் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், கிராம மக்கள் வைரக் கற்களை தேடி விளை நிலங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர். போட்டி போட்டுக்கொண்டு விளைநிலங்களை உழுது கொண்டிருப்பதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
வைரம்.. இந்த பெயரே ஒருவருக்குள் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு என பல வகையான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பூமிக்கடியில் 200 கிலோமீட்டர் அடியில் மட்டுமே கிடைக்கும் என கூறப்படும் இந்த அதிசய ரத்தினத்தை, இப்படி அசால்ட்டாக ஆந்திராவில் தரையில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆந்திராவின் கர்னூல், கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மழை தொடங்கும் நேரத்தில் நிலத்தில் வைர கற்களை தேடி மக்கள் படையெடுப்பது காலம்காலமாக நிகழ்ந்து வரும் வழக்கம். நிலத்தில் கிடைக்கும் வண்ண கற்களை சில இடைத்தரர்கள் வைரம் எனக்கூறி, அதற்கு ஈடாக பணமோ, தங்கமோ கொடுத்து அதனை வாங்கி கொள்கின்றனர்.
தற்போது, கர்னூல் மாவட்டம் பத்திகொண்டா பகுதியில், பெருவழி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு தனது நிலத்தில் வைர கல் கிடைத்ததாகவும், அதனை ஐந்து லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 3 சவரன் தங்க ஆபரணத்தை பெற்றுக்கொண்டு இடைத்தரகருக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பரவியதால், கிராம மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு, குடும்பத்தினருடன் ஊரில் உள்ள நிலங்கள் மற்றும் காடுகளில் வைர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வழக்கத்துக்கு மாறாகத் தோன்றும் கற்கள் அனைத்தையும் எடுத்து, வைரமாகத் தான் இருக்கும் எனும் நம்பிக்கையில் தங்கள் பைகளுக்குள் போட்டுக்கொண்டனர்.
வைரக்கல் தேடுதல் வேட்டைக்கு விஜயநகரப் பேரரசு தொடங்கி பல்வேறு கதைகளை கிராம மக்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை தொல்லியல் துறை இதுவரை உறுதிசெய்யவில்லை.
இதையும் படிங்க:
ஹர்திக் பாண்டியா – நடாஷா தம்பதி விவாகரத்து செய்கிறார்களா? – பின்னணி என்ன?
ஒவ்வொரு ஆண்டும் வைரக் கல்லை தேடி எடுத்த சிலர் ஒரே இரவில் கோடீஸ்வரராகவோ, லட்சாதிபதியாகவோ ஆனார்கள் என்றால் நம்ப முடிகிறதா? இல்லை என்றால் இவ்வாறு தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வைரத்திற்காக நிலத்தை தோண்டிக்கொண்டிருப்பார்களா? வேலையை விட்டுவிட்டு இந்த நிலங்களுக்கு அருகே தற்காலிகமாகத் தங்குவதற்கு காரணம், கிடைக்கப்போகும் அந்த ஒரு கல் தங்கள் எதிர்காலத்தை மாற்றும் எனும் நம்பிக்கைதான்.
.