இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை ஆதாயத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை பின்னர் சரிவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 790 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், அண்மையில் வெகுவாக உயர்ந்திருந்த வங்கிப் பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தினர். சென்செக்ஸில் அதிகத் திறன் கொண்ட மார்க்கெட் லீடர் ரிலையன்ஸýம் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தது. இதனால், சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது என்று பங்குவர்த்தகத் தரக் நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், தனியார்- பொதுத்துறை வங்கிகள், ஆட்டோ, நிதி நிறுவனங்கள், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.6.03 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.385.97 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.1,509.16 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் 790 புள்ளிகள் சரிவு:
காலையில் 67.60 புள்ளிகள் கூடுதலுடன் 73,162.82-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 73,223.11 வரை மேலே சென்றது. பின்னர், 72,222.29 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 790.34 புள்ளிகள் (1.08 சதவீதம்) குறைந்து 72,304.88-இல் நிறைவடைந்தது. ஒரு கட்டத்தில் உச்சத்திலிருந்து 1000.82 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,921 பங்குகளில் 881 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,963 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 77 பங்குகளின் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
பவர்கிரிட், மாருதி கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் பவர்கிரிட் (4.43 சதவீதம்), மாருதி 2.94 சதவீதம்), இண்டஸ்இண்ட் வங்கி (2.93 சதவீதம்), எம் அண்ட் எம், விப்ரோ (2.68 சதவீதம்) உள்பட 26 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. அதே சமயம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல் ஆகிய 4 பங்குகள் மட்டும் சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 247 புள்ளிகள் வீழ்ச்சி:
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 247.20 புள்ளிகள் (1.11 சதவீதம்) குறைந்து 21,951.15-இல் முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது ஆரம்பத்தில் அதிகபட்சமாக 22,229.15 வரை மேலே சென்ற நிஃப்டி, பின்னர் 21,915.85 வரை கீழே
சென்றது. நிஃப்டி பட்டியலில்
36 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 4 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.