திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க இயலாது என தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருமலையில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும்நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில்தேவஸ்தான நிர்வாக அதிகாரிதர்மாரெட்டி கலந்து கொண்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்ரீவாரி சேவைக்கான வயது உச்சவரம்பை 60 லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 60 வயதுக்குட்பட்டவர்களால்தான் பக்தர்களுக்கு தேவையான சேவையை செய்ய முடிகிறது. மேலும், ஸ்ரீவாரி சேவை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்.
பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஒரு பக்தருக்கு 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற நாட்களில் தேவையான லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. லட்டுவின் தரம், எடை குறையவில்லை. ஆனால், பக்தர்கள் லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அது இயலாது.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து அந்த செயலிக்குள் செல்வதற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்துபோய் விடுகிறது எனவும் பக்தர்கள்குறை கூறியுள்ளனர். தேவையானடிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்குகிறோம். ஏழுமலையானின் பக்தர்கள் இதற்காகவே காத்திருந்து உடனடியாக பதிவு செய்து விடுவதால் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் தீர்ந்து விடுகின்றன என்பது உண்மை. சுவாமியை மிகஅருகில் தரிசிக்க என்ன செய்ய வேண்டுமெனவும் பக்தர்கள் கேள்வி கேட்டுள்ளனர். இதற்காக ஸ்ரேவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள், விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் பெற்று சுவாமியை தரிசிப்பதே வழியாகும்.
கோடை விடுமுறை வருவதால் வரும் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை விஐபி சிபாரிசு கடிதங்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள், மேலும் சில ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் குறைக்கப்படும். திருமலை, திருச்சானூர் போன்று தற்போது திருப்பதி கோவிந்தராஜர் கோயிலிலும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருமலையில் 7,500 தங்கும் அறைகள் மட்டுமே உள்ளன. அதிகபட்சம் இதில் ஒரு நாளைக்கு 45 ஆயிரம் சாமானிய பக்தர்கள் தங்கலாம், ஆதலால், முடிந்தவரை திருப்பதியில் தேவஸ்தான அறைகளில் பக்தர்கள் தங்க வேண்டும்.
திருமலையில் தெப்போற்சவம் வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி கூறினார்.
உண்டியல் காணிக்கை: கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் திருப்பதி ஏழுமலையானை 19.06 லட்சம் பக்தர்கள் தரிசனம்செய்துள்ளனர். பக்தர்கள் ரூ.111.71 கோடியை உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர். 43.61 லட்சம் பேருக்கு இலவசஅன்னபிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 6.56 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.