நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் தண்டனைக்குரிய குற்றம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் பணம் வாங்கிக்கொண்டு பேசும் மற்றும் வாக்களிக்கும் எம்பி, எம்எல்ஏக்கள் மீது வழக்கு தொடர முடியாது என 1998 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இதற்கு எதிராக ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ சீதா சோரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
அதில், “நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது பொது வாழ்க்கையின் நேர்மையை சீர்குலைக்கும். இதற்கு விலக்கு அளித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தந்த தீர்ப்பு முரணானது. நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்பது அவைகளுக்கு நெருக்கமான தொடர்புடையது. அவையின் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமானது. நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்கும் போது, அவர்களின் வாக்குகள் அவை நடவடிக்கைகளில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தல் மட்டுமல்ல, குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இது பொருந்தும். ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகள் அபாயகரமானவை.
நாடாளுமன்ற சிறப்புரிமைகளால் லஞ்சம் பாதுகாக்கப்படவில்லை. 1998-ன் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் விளக்கம் அரசியலமைப்பின் 105 மற்றும் 194 வது பிரிவுக்கு முரணானது. தற்போது வழக்கும் தீர்ப்பு அடிப்படையில், மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தது உறுதியானால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.” இவ்வாறு 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள், மாற்றுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாக்களித்திருந்தனர். இந்தத் தீர்ப்பின் படி, புகார் வழங்கப்பட்டு குற்றம் நிரூபணமால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…