சென்னை: பன்னாட்டு தொழில்நுட்ப மற்றும் புத்தாக நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உதிரிபாக விநியோ ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிவிஎஸ் குழுமத்தைச் சோ்ந்த விநியோகக் கட்டமைப்பு நிறுவனம் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யுஷன்ஸ் (எஸ்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உதிரிபாக விநியோகம் தொடா்பாக டிவிஎஸ் எஸ்சிஎஸ் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை வரும் 2029-ஆம் ஆண்டு வரை ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் நீட்டித்துள்ளது. சிங்கப்பூரில் அமைந்துள்ள நிறுவனத்தின் அதிநவீன விநியோக மையத்தின் மூலம் ரோல்ஸ்-ராய்ஸின் பவா் சிஸ்டம் தொழில் பிரிவு ஆசிய பசிபிக் பகுதிச் சந்தையிடல் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிவிஎஸ் எஸ்சிஎஸ் நிறுவனத்தின் சேவைத் திறனை இந்த ஒப்பந்த நீட்டிப்பு உணா்த்துகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.