இந்தியாவில் எத்தனையோ நிறுவனங்கள் தொடங்கிய சிறிது காலத்திலேயே உச்சத்தை தொட்டுள்ளன. ஆனால் இதில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது உச்சநிலையை தொடர்ந்து தக்கவைக்க முடியாமல் சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்துள்ளன. அப்படியொரு நிறுவனம்தான் பைஜூஸ் (Byju’s).
இந்தியாவில் மிகவும் மதிப்புவாய்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக கருதப்பட்ட Byju’s நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2022-ம் ஆண்டில் ரூ.1,83,000 கோடியாக இருந்தது. தற்போது இந்நிறுவனத்தில் முதலீடு செய்த பல நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற்று வருவதால் இதன் மதிப்பு நாளுக்கு நாள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
ஆன்லைன் கல்வி நிறுவனமான Byju’s நிறுவனத்தை பைஜூ ரவீந்தரன் மற்றும் அவருடைய மனைவி திவ்யா கோகுல்நாத் இணைந்து 2011-ம் ஆண்டு தொடங்கினர். இரண்டு வருடங்களுக்கு முன்பு பல லட்சம் கோடி மதிப்பிலிருந்த இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பு எவ்வுளவு தெரியுமா? இதன் சந்தை மதிப்பு 95% குறைந்து தற்போது ரூ.8,290 கோடியாக உள்ளது. இந்த சரிவிற்கு என்ன காரணம்?
2023-ம் ஆண்டிலிருந்து Byju’s நிறுவனம் கடுமையான நிதிச் சிக்கலில் தத்தளித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது Byju’s நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களாக ரவீந்தரன், அவரது மனைவி திவ்யா மற்றும் அவருடைய சகோதரர் ரிஜூ ரவீந்தரன் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் Byju’s நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பிலிருந்து ரவீந்தரனை நீக்க வேண்டும் என்றும் புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறி நிறுவனத்தின் ஜெனரல் மீட்டிங் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற்றது.
Byju’s நிறுவனத்தின் அசுர வளர்ச்சி காரணமாக ரவீந்தரனின் சொத்து மதிப்பு அதிரடியாக உயர ஆரம்பித்தது. கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு ரூ.30,600 கோடியாக இருந்தது. ஆனால் இன்றோ வெறும் ரூ.833 கோடியாக குறைந்து போனது.
கொரோனா காலகட்டத்தில் உலகமே வீட்டிற்குள் முடங்கியிருந்த நிலையில், Byju’s நிறுவனத்தின் ஆன்லைன் கல்வி பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால் சில மாதங்களிலேயே நிறுவனம் அபரிதமான வளர்ச்சியை அடைந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு நிறுவனத்தின் வருமானம் குறைய ஆரம்பித்தது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கடன் அதிகரித்து ஒரு கட்டத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடன் தொகை எகிறிப்போனது.
கொரோனா சமயத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராகவும் பைஜூஸ் நிறுவனம் இருந்தது. இதுதவிர 2022-ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பைக்கு முக்கிய ஸ்பான்சராக Byju’s நிறுவனம் இருந்தது. தங்களது நிறுவனத்தின் உலகளாவிய விளம்பர தூதுவராக பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியை Byju’s நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…