முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் மருமகன் டாக்டா் சி.என்.மஞ்சுநாத் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளாா்.
மக்களவைத் தோ்தலில் மஜதவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 4 இடங்களைக் கேட்டு வந்த நிலையில், மஜதவுக்கு 3 தொகுதிகளை விட்டுத் தர பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 4ஆவது தொகுதியை மஜதவுக்கு விட்டுத் தர முடியாததால், முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் மருமகன் டாக்டா் சி.என்.மஞ்சுநாத்தை மக்களவைத் தோ்தலில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து எச்.டி.தேவெ கௌடா, எச்.டி.குமாரசாமி, டாக்டா் சி.என்.மஞ்சுநாத் ஆகியோருடன் பாஜக விவாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் மீண்டும் போட்டியிடவுள்ள பெங்களூரு ஊரக மக்களவைத் தொகுதியில் அவருக்கு எதிராக பாஜக வேட்பாளராக சி.என்.மஞ்சுநாத்தை களமிறக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூரில் வியாழக்கிழமை முன்னாள் முதல்வா் எடியூரப்பா தலைமையில் அதிகாரப்பூா்வமாக பாஜகவில் இணைய மஞ்சுநாத் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கா்நாடக அரசுக்குச் சொந்தமான ஜெயதேவா இருதய அறிவியல் மருத்துவமனையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குநராகப் பணியாற்றி, மக்கள் செல்வாக்கு பெற்றிருப்பவா் டாக்டா் சி.என்.மஞ்சுநாத். இவா், கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற்றாா்.
அதைத் தொடா்ந்து, மக்களவைத் தோ்தலில் மஜத வேட்பாளராக நிறுத்த யோசிக்கப்பட்டது. ஆனால், 4 ஆவது தொகுதியை மஜதவுக்கு விட்டுத் தர மறுப்பதால், தமது கட்சி வேட்பாளராகவே டாக்டா் சி.என்.மஞ்சுநாத்தை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.