பிலிபித்: முடியாதது என்று எதுவுமே இல்லை என உலகுக்கு நிரூபித்துக் காட்டியது இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளசஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்நோர், நாகினா, மொராதாபாத், ராம்பூர், பிலிபித் ஆகிய 8 மக்களவைத் தொகுதிக்கு முதல்கட்டமாக வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் நேற்று பிலிபித்துக்கு வந்து தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற வாகன ஊர்வலத்தில் பிரதமர் கலந்துகொண்டு வாக்கு வேட்டையாடினார்.
பிலிபித்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எவ்வளவு கடினமான இலக்காக இருந்தாலும், அதை அடைவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அதை நிச்சயம் சாதிக்கும்.
முடியாதது என்று எதுவும் இல்லை என உலகுக்கு நிரூபித் தோம். வளர்ச்சி பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிநடைபெற்ற காலத்தில் மற்ற நாடுகளிடம் நாம் உதவி கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் கரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் தடுப்பூசியைக் கண்டுபிடித்து உலக நாடுகள் முழுமைக்கும் உதவி செய்தோம்.
இந்தியா உலகின் மிக வேகமாகவளரும் பொருளாதார சக்தியாகமாறியபோது, நீங்கள் (மக்கள்)அதைப் பற்றி பெருமைப்பட்டீர்களா இல்லையா? நமதுசந்திரயான் நிலவில் மூவர்ணக்கொடியை ஏற்றியபோது நாம் பெருமைப்பட்டோமா… இல்லையா? இந்தியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான ஜி-20 உச்சி மாநாடுஉலகம் முழுவதும் பாராட்டப் பட்டது.
நமது நாடு வலிமை பெற்ற நாடாக மாறும்போது நமது பேச்சை உலக நாடுகள் கேட்கும்.
கல்யாண் சிங்குக்கு பாராட்டு: பிலிபித் தொகுதியில் பாஜகமூத்த தலைவர் ஜிதின் பிரசாதாபோட்டியிடுகிறார். அவருக்குபொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். 1992-ல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பின்போது உ.பி. முதல்வராக இருந்தவர் கல்யாண் சிங். தனது வாழ்க்கையை மாநில மக்களுக்காகவும், மாநில அரசுக்காகவும் அர்ப்பணித்தவர் கல்யாண் சிங். ராமர் கோயில் கட்டுவதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் அவர். ஆனால் இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள், ராமர் கோயில் கட்டியதையே வெறுக் கின்றனர்.
ராமர் கோயில் அழைப்பிதழை அக்கட்சி ஏற்காமல் கடவுள் ராமரையும் அவமதித்தது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்றவர்களையும் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி உள்ளது. சமரச அரசியலில் ஆழமாக இறங்கி உள்ள காங்கிரஸ் அதில் இருந்து வர முடியவில்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் சொந்தமாக தேர்தல் அறிக்கையைக் கூட தயாரிக்க முடியவில்லை. அது முஸ்லிம் லீக்கின் அறிக்கையை போல் உள்ளது.
நாட்டை பிரிக்க முயற்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸும், சமாஜ்வாதியும் எதிர்க்கின்றன. அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு நாம் குடியுரிமை வழங்காவிட்டால், வேறு யார் வழங்குவார்கள்? துன்புறுத்தலுக்கு உள்ளான இந்துக்கள், சீக்கியர்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது. நாட்டை பிரிக்க அக்கட்சி முயற்சி செய்கிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.