புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச காங்கிரஸின் மாவட்டத் தலைவரான பிரதாப் சிங்கல், டெல்லி சென்று தனது சந்திப்புகளை முடித்து விட்டு திரும்பி உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட இருக்கிறார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறினார்.
கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். எனினும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதை அடுத்து அவர் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.